பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. கண்ணமங்கை பக்தவத்ஸலன்

ல வருஷங்களுக்கு முன் ஒரு நடன நாட்டிய நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தேன். புதிய முறையில் பல புராணக் கதைகளை நடன நாட்டியமாக நடித்துக் காண்பித்தனர் நடிகர்கள், ஆண்டாள் திருக்கல்யாணம், பஸ்மாசுரமோகினி முதலிய புராணக் கதைகளை நடனமாடியே விளக்கம் செய்தனர். பஸ்மாசுர மோகினி கதையை அடுத்துக் கஜேந்திர மோட்சம் என்று கண்டிருந்தது நிகழ்ச்சி நிரலில், பஸ்மாசுர மோகினியின் பஸ்மாசுரன், சிவன், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு எல்லாருமே மேடைமீது தோன்றி நடனம் ஆடினர்.

அது போல் கஜேந்திர மோட்சத்திலும் கஜேந்திரன், முதலை, கருடன், மகாவிஷ்ணு எல்லோருமே மேடைமீது தோன்றுவார்களோ என்று எண்ணினேன் நான், விஷ்ணுவின் வேடத்தை வேண்டுமானால் நடிகர்கள். போட்டுக் கொள்ளலாம்; யானை, முதலை, கருடன் வேடங்களை எல்லாம் மனிதர்கள் போட்டு நடித்தால் நன்றாயிருக்குமா என்று நினைத்தேன். அதற்குள் நிகழ்ச்சியின் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. திரையும் விலகியது. ஒரே ஒரு நடிகர்