பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேங்கடம் முதல் குமரி வரை

தான் மேடைமீது தோன்றினார், பின்னணி வாத்தியங்கள் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தன. நடிகர் தம் இரண்டு கைகளையும் நீர் நிறைந்த தடாகம் ஒன்று இருக்கிறது என்று காட்டிவிட்டு மலரும் தாமரைகளையும் ஹஸ்த முத்திரை மூலமாகவே காண்பித்தார். இதன் மூலம் தாமரை மலர்ந்த தடாகமே காண்பித்தார். சிறிது நேரத்தில் அந்த நடிகரே மேடையில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு நடந்தார். இரண்டு காலால்தான் நடந்தார்.

என்றாலும் உடல் அசைவு வலதுகையைத் தும்பிக்கை போல் அங்குமிங்கும் ஆட்டுவதன் மூலம் அசைந்து ஆடிவரும் யானையையே கண்முன் கொண்டு வந்துவிட்டார். இனி இந்த யானையே தடாகத்தில் இறங்குகிறது. படிக்கட்டில் யானை எப்படி மெதுவாக இறங்குமோ அப்படியே இறங்குவது போல் அபிநயித்தார். பின்னர் யானை தும்பிக்கை மூலம் நீர் குடிப்பது, வாரி இறைப்பதுயெல்லாம் காட்டினார் நடிகர். எல்லாம் கை அசைவு, கால் அசைவு, உடல் அசைவுகளினாலேயே, இப்படி நடித்த நடிகரே இன்னும் சில நிமிஷ நேரங்களில் முதலையாக மாறிவிட்டார்.

முதலை தண்ணீருக்குள் எப்படி வளைந்து வளைந்து வருமோ அந்தக் காட்சியைக் கண்முன் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் அவரே முதலை காலைப் பிடித்துக்கொள்ள அதனால் வீறிட்டு அலறும் யானையாகவும் மாறினார். பின்னர் அவரே கருடனாகவும், கருடன்மேல் ஆரோகணித்து வரும் பெருமாளாகவும் மாறி விட்டார், மேடைமீது 'ஆதிமூலமே' என்று அழைத்த கஜேந்திரனை முதலைப் பிடியினின்றும் விடுவித்து மோக்ஷமும் அளித்து விடுகிறார். இத்தனையையும் ஒரு நடிகரே பத்து நிமிஷ நேரத்தில் அங்கு எழும் இன்னிசைக்கேற்ப நடனம் ஆடி நடித்து மேடைமீது காட்டி விடுகிறார்.