பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

83

நினைத்தால் அவன் விரித்த படுக்கையில் படுத்து அறிதுயில் கொள்ளும் அனந்த சயனன் தான் ஞாபகத்துக்கு வருவான். ‘பாற்கடலில் பாம்பணைமேல் பையத் துயின்றான் பரமன்' என்பது தானே கலைஞன் கற்பனை. ஆனால் இங்குள்ள பரமனோ நிரம்பவும் உஷாராகப் படுக்கையை விட்டே எழுந்து உட்கார்ந்திருக்கிறான். பாயாகச் சுருண்டு கிடந்த பாம்பே இங்கே 'கோப்புடைய சீரிய சிங்காதனமாக' அமைந்திருக்கிறது இந்த வைகுண்டநாதனுக்கு. ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருப்பதிலேயே ஒரு காம்பீர்யம். ஊன்றிய காலின் மேல் நீட்டிய கையோ அவன்றன் உல்லாசத்தைக் காட்டுகிறது. சங்கு சக்ரதாரியாய்த் திருமாமணி மகுடம் தாங்கிப் புன்னகை தவழ இருக்கும் இந்த வைகுண்டநாதனின் திருஓலக்கம் அழகுணர்ச்சி உடையார் எல்லாம் கண்டு களிக்கும் ஒரு கலைச் சிகரம். கஜேந்திர மோக்ஷத்திலே கலைஞனின் கற்பனை வளம் நிரம்பியிருந்தால் இந்த வைகுண்டநாதன் தோற்றத்திலே ஓர் அற்புத சௌந்தர்யம் நிறைந்திருக்கிறது. இந்த அழகனை வழுத்தி வாழ்த்தாத மானுடர் மானுடரே அல்ல என்பது மங்கை மன்னன் சிததாந்தம். அப்படியே அவர் பாடுகிறாரே,

மண்ணாடும், விண்ணாடும், வானவரும்,
தானவரும், மற்றும் எல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்,
தான் விழுங்கி உய்யக் கொண்ட
கண்ணாளன், கண்ணமங்கை நகராளன்
கழல் சூடி, அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
போதெல்லாம் இனிய வாறே.

என்பது மங்கை மன்னன் பாடல், இத்தகைய சிற்ப வடிவங்களெல்லாம் நிறைந்து இந்தக் கோயிலை ஒரு கலைக் கூடமாகவே அமைத்து வைத்திருக்கிறார்கள் நமது சிற்பிகள்.