பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு, பாஸ்கரத் தொண்டைமான்

101

சிவபெருமான் பொன்னனையாளுக்காக ரஸவாதியாக வந்த திருவிளையாடலை,

விரிநீர்ச் செம்போதத் திரு உருவாம்
பொன்னனையாட்கு இந்த வாதத்
திருஉருவாய் வந்துதித்தோன்

என்று திருப்பூவனநாதர் உலா போற்றுகிறது. கோயிலுக்கு வடபுறம் பொன்னனையாள் மண்டபம் என்று ஒரு, கட்டிடம் இருக்கிறது. அது இப்போது இடிந்து பாழடைந்து கிடக்கிறது. அங்குள்ள தூண் ஒன்றில் பொன்னனையாளின் சிலா உருவம் செதுக்கப் பட்டிருக்கிறது.

பூவணத்து மின்னனையாள்

அக்கோயில் வாயிலில் உள்ள நந்தி சிறிது சாய்ந்திருக்கிறது. ஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது இங்குள்ள மணலெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி அளித்திருக்கிறது. ஆதலால் அவர் அக்கரையிலே நின்று பாடியிருக்கிறார். அவரைப் பார்க்க இறைவன் விரும்பினாரோ, இல்லை அவர் தம்மைப் பார்க்க வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றுதான் விரும்பினாரோ? இறைவன் நந்தியைக் கொஞ்சம் சாய்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். இன்னும் சம்பந்தரிடம் வாதில் தோற்ற சமணர்களெல்லாம் கழு ஏறிய இடம் இப் பூவணம்தான் என்பர். அதைக் குறிக்கக் கழுவர் படைவீடு என்று ஓர் இடம் உண்டு என்றும் கூறுவார்.