பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

எழுகமலப் பூ அழகர்
எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும்
கழல் வளையே ஆக்கினரே

என்று ஏங்குகிற பாடலில் ஆண்டாள் எப்படி அரங்கத்து அழகனின் குழல் அழகிலும், கண் அழகிலும், கொப்பூழ் அழகிலும் உள்ளம் பறிகொடத்து நின்றிருக்கிறாள் என்பதைப் பார்க்கிறோம். அன்று மிதிலை நகரில் உலா வந்த ராமனைக் கண்ட பெண்கள் எப்படி அவனது தோள், தடக்கை முதலிய அவயங்களைக் கண்டு மோகித்து, அங்க அவயவங்களில் வைத்த கண்ணை எடுக்க மூடியாமாமல் திணறி நின்றார்கள் என்று கம்பன் வர்ணிக்கிறானோ, அதையும் மிஞ்சிய நிலையில் அழகனது அவயவங்கள் எல்லாவற்றையுமே ஆராதித்துக் காணும் பேறு பெற்றவள் ஆண்டாள். ஆதலால் அவளது அழகு ஆராதனையே சிறந்தது என்று கூறினேன் நான். இப்படித்தான் ஸ்ரீமந் நாராயணன் எல்லா ஆழ்வார்களாலும் ஆராதிக்கப்பட்டிருக்கிறான். ஆழ்வார்கள் கண்ட அழகர்களில் எல்லாம் சிறந்த அழகனாக இருப்பவனே திரு மாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயிலில் அழகன் என்ற பெயரோடு கோயில் கொன்டிருக்கிறான். அந்த அழகன் இருக்கும் அழகர் கோயிலுக்கே செல்கிறோம் இன்று.

அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைல் தொலையில் இருக்கிறது. இதனையே சோலைமலை என்றும் கூறுகின்றனர். சோலைமலை, திருமாலிருஞ்சோலை என்றெல்லாம் கூறினால் வண்டிக்காரர்களுக்கோ, பஸ்காரர்களுக்கோ தெரியாது. அழகர் கோயில் என்று சொன்னால் மாத்திரமே தெரியும்.

மதுரையிலிருந்து காரில் செல்லலாம். பஸ்ஸில் செல்லலாம். அப்படிச் சென்று சேர்ந்தால் முதலில் நம்மை ஒரு பெரிய சோலையிலே இறக்கி விடுவார்கள். சோலைக்கு மேற்கும் வடக்கும் நீண்டுயர்ந்த மலைச்சிகரம். ஆதலால் சோலைமலை என்று