பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

121

இனித்தான் கோயிலின் பிரதான வாயிலான தொண்டைமான் கோபுர வாசலைக் கடந்து உள் பிராகாரங்களுக்குச் செல்லவேணும். கோயில் மிகப் பெரிய கோயில். இரண்டு மூன்று பிராகாரங்களைக் கடந்து தான் கருவறை சேரவேண்டும். வழியில் இருப்பவை, சுந்தரபாண்டியன் மண்டபம், ஆரியன் மண்டபம், முனையதரையன் மண்டபம் முதலியன, கோயிலின் கருவறையில் மூலவராக நிற்பவர் ஸ்ரீ பரமசாமி. இவர் ஐம்படை தாங்கியவராய்க் கம்பீரமாக நிற்கிறார். ஸ்ரீதேவியும் பூதேவியும், இருபுறம் நிற்கிறார்கள். இவர் கையிலுள்ள சக்கரம் பிரயோக சக்கரம். இவர் முன்பு எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியே அழகர் என்னும் சுந்தரராஜர். ஏற்றிருக்கும் பெயருக்கு ஏற்ப மிகவும் சுந்தரமான வடிவம். அபரஞ்சித தங்கத்தால் ஆனவர்.

இவருக்கு அபிஷேகம் எல்லாம் நூபுர கங்கைத் தீர்த்தத்தால் தான். மற்ற நீரால் அபிஷேகம் செய்தால் அறுத்து விடுகிறாராம். இவரே சோலைமலைக்கரசர். இந்த உற்சவரைத் தவிர வேறு சில உற்சவ மூர்த்திகளும் உண்டு. அவர்கள் எல்லாம் ஸ்ரீ சுந்தரபாஹு, ஸ்ரீநிவாசர், நித்யோத்ஸவர் முதலியோர். இவர்கள் எல்லாம் வெள்ளியில் செய்யப்பட்டவர்கள். இந்தக் கருவறையை அடுத்த பிராகாரத்திலேயே வலம்புரி விநாயகர் இருக்கிறார். இந்தப் பிராகாரத்திலேயே சேனை முதலியார், விஷ்வக் சேனர் இருக்கிறார்கள், இங்குள்ள பைரவர் க்ஷேத்திர பாலகர் என்று அழைக்கப்படுகிறார், இவர் நிரம்பவும் வரப்பிரசித்தி உடையவர். கோயிலின் அர்த்த சாய பூசை முடிந்ததும் கோயில் கதவை பூட்டிச் சாலியை இந்த க்ஷேத்திர பாலகர் முன் வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் எடுத்துக் கோயிலைத் திறப்பார்கள்.

இக்கோயிலின் தாயார் சந்நிதி தென்பக்கம் இருக்கிறது. இவளே கல்யாண சுந்தரவல்லி. தனிக்கோயில் தாயார் என்றும் அழைப்பார்கள் மக்கள். கல்யாண சுந்தரவல்லி என்ற பெயர்க்கேற்ப அதிக சௌந்தர்யத்துடனேயே விளங்குகிறார். கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி. உற்சவமூர்த்தியான ஆண்டாள்,