பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வேங்கடம் முதல் குமரி வரை

மற்ற தலங்களைப் போல் அல்லாது உட்கார்ந்திருக்கும் பாவனையில் இருக்கிறது. சுந்தரராஜர் தமது திருக்கல்யாண தினத்தன்று ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள் என்னும் நான்கு தேவிமார்களுடன் எழுந்தருளுகிறார். ஸ்ரீ ஆண்டாள் ரங்கநாதரையும், அவருடைய அம்சமான சுந்தரராஜரையும் தம் கணவனாக வரித்துக் கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்நிதிகள் தவிர இக்கோயிலில் ஸ்ரீ சுதர்சன சக்கரர், யோக நரசிம்மர் முதலிய சந்நிதிகளும் விசேஷமானவை. இன்னும் இங்குள்ள ராக்காயி அம்மனும் ஸ்தல தீர்த்தங்களுடன் அதிதேவதையாக விளங்குகிறாள்.

இந்த ஸ்தலத்தில் கோயிலுக்கு அடுத்தபடியாக இரண்டு தீர்த்தங்கள். ஒன்று நூபுர கங்கை. மற்றொன்று சிலம்பாறு. கோயில் வடக்கு வாயில் வழியாக மலை ஏறி இரண்டு மைல் தூரம் சென்றால் நூபுரகங்கை என்னும் தீர்த்தத்தை அடையலாம். அதன் உற்பத்தி ஸ்தானம் தெரியவில்லை. யானைத் துதிக்கை போல் அமைந்திருக்கும் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்துக்கு வருவதைத்தான் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தத்தில் இரும்புச் சத்தும் தாமிரச் சத்தும் இருக்கின்றனவாம். அதனால் இதில் நீராடுபவர்களுக்குத் தீராத நோயெல்லாம் தீர்கிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கிப் பாயும்போது சிலம்பாறு என்று பெயர் பெறுகிறது. இந்தச் சிலம்பாறு ஆதியில் பிரமன் திரிவிக்கிரமரின் தூக்கிய திருவடியில் அபிஷேகம் செய்த நீர் என்று நம்பிக்கை.

இன்று இந்த ஆறு சுந்தரராஜனின் அடிகளை வருடிக்கொண்டு பாய்ந்து பெருகி வயல்களை வளப்படுத்துகிறது. இதன் சுவை இனிமையாக இருக்கிறது. ஆதலால் இதனைத் தேன் அருவி என்று அழைக்கிறார்கள் மக்கள். இந்த நூபுர கங்கை சிலம்பாறு இருந்த இடத்தில்தான் அந்தப் பழமுதிர்ச்சோலைமலை கிழவோனாக முருகன் அன்று கோயில் கொண்டிருந்தான். அதுவே ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலைமலை என்றும் அறிகிறோம். இல்லை, இது விவாதத்துக்கு உரிய விஷயம் என்று வாதிடுவோர் உண்டு.