பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வேங்கடம் முதல் குமரி வரை

ஏதாவது உத்சவம் நடந்தகொண்டேயிருக்கும். இவற்றில் சிறப்பானது சித்திரா பௌர்ணமித் திருநாள் தான், மதுரையில் மீனாக்ஷி சுந்தரேசுவரருக்கு அன்று திருமணம் நடக்கிறது. அதைக் காணச் சீர்வரிசைகளுடன் புறப்படுகிறார் சுந்தரராஜர். அவர் லவகைக்கரை வந்து சேருமுன் அவரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கின்றனர், வழியில் உள்ள மண்டபங்களில் எல்லாம் தங்கிப் பக்தர்களது வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். சித்திரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி வண்டியூர் வைரை சென்று தேனூர் மண்டபத்தில் தங்கித் திரும்புகிறார். திரும்பும்போது நடக்கும் புஷ்பப் பல்லக்கு சேவை எல்லாம் பிரசித்தமானது. இந்த உலாவைப் பற்றி மக்கள் பேசிக்கொள்வதெல்லாம் விசித்திரமானது.

அதாவது சுந்தரராஜன் தன் தங்கை திருமணத்துக்குச் சீர்வரிசைகளுடன் வருவதாகவும் அப்படி வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் குறித்த காலத்தில் வந்து சேரமுடியவில்லை என்றும், ஆதலால் இவர் வருமன்பே முகூர்த்தம் நடந்து விடுவதாகவும், அதனால் கோபங்கொண்டு மதுரை நகருக்கு வராமல் வைகை வழியாகவே வண்டியூர் செல்வதாகவும் சொல்வர். இக்கூற்றில் உண்மை இல்லை. மீனாக்ஷி திருமனத்துக்குச் சுந்தரராஜன் வந்திருந்து தங்கையைத் தாரைவார்த்துக் கொடுத்ததாகவே வரலாறு. இதற்குரிய சிற்ப வடிவமும் சோமசுந்தரர் கோயிலில் இருக்கிறது. அப்படியிருக்க மக்கள் இப்படிக் கயிறு திரிப்பது சரியல்லதான். என்றாலும் இப்படியெல்லாம் கடவுளர் வாழ்விலும் பிணக்குகள் எற்படுத்தி அனுபவிப்பதிலே ஓர் இன்பமே காண்கிறார்கள் பொதுமக்கள்.

பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் முதலிய அறுவரால் இந்த அழகர் சுந்தரராஜன் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறார். பெரியாழ்வாருடன் ஆண்டாள். இந்தச் சோலைமலைக்கு வந்திருக்கிறாள். அவள் சூடிக்கொடுத்த மாலையை அழகர் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்.