பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

129

இவளையே, தடாதகை, அங்கயற் கண்ணி என்றெல்லாம் அழைக்கிறார்கள். அன்னையை வணங்கி அவள் திருக்கோயிலை வலம் வரும்போதே கோயில் திருப்பணி செய்த திருமலை நாயக்கரைச் சிலை வடிவில் அவரது இரண்டு மனைவியருடனும் காணலாம். மீனாக்ஷியின் சந்நிதியை விட்டு வெளி வந்து வடக்கு நோக்கி நடந்தால் நம்மை எதிர்நோக்கியிருப்பார் முக்குறுணிப் பிள்ளையார், விநாயக சதூர்த்தியன்று முக்குறுணி அரிசியை அரைத்து மோதகம் பண்ணி அந்த நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவர் ஆனதால் முக்குறுணிப் பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். பெயருக்கு ஏற்ற காத்திரமான வடிவம். அவருக்கு வணக்கம் செலுத்தி, சுவாமி கோயில் பிராகாரத்தில் நடக்கலாம். மேற்குப் பிராகாரத்தில் ஏகாதச லிங்கங்கள் இருக்கின்றன. வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேரும் சிலை உருவில் இருக்கிறார்கள். கோயில் முன்பக்கம் வந்தால் கம்பத்தடி மண்டபம். இதிலுள்ள சிற்ப வடிவங்களைக் கானக் கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஆதலால் கோயிலுள் நுழைந்து முதலில் சொக்கலிங்கப் பெருமானை வழிபாடு செய்து விட்டு, அவகாசத்துடனேயே இம்மண்டபத்துக்கு வருவோம். மூலத்தானத்தில் லிங்க உருவில் இருப்பவர் சொக்கர். அவரைப் பல பெயர் சொல்லி அழைக்கிறார்கள்,

புழுகுநெய்ச் சொக்கர் அபிடேகச்
சொக்கர்; கர்ப்பூரச் சொக்கர்.
அழகிய சொக்கர், கடம்பவனச்
சொக்கர், அங்கயற்கண்
தழுவிய சங்கத் தமிழ்ச்
சொக்கர் என்று சந்ததம் நீ
பழகிய சொற்குப் பயன் தேர்ந்து
வா இங்கு என் பைங்கிளியே.

என்று அத்தனை பெயரையும் அழகாகச் சொல்கிறது ஒரு பாட்டு, சொக்கர் என்றாலே அழகியவர் என்று தானே பொருள்,

வே.மு.கு.வ-9