பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வேங்கடம் முதல் குமரி வரை

அதனாலேயே அவரைச் சுந்தரேசுவரர் என்றும் அழைக்கிறார்கள். இவர் இத்தலத்து அதிபதியாய் எழுந்தருளியது நல்ல ரஸமான கதை அல்லவா?

மலயத்துவஜ பாண்டியன் மகளாகத் தடாதகை பிறக்கிறாள். வளர்கிறாள். தடாதகை தந்தைக்குப் பின், தானே மகுடம் சூடிக்கொண்டு பாண்டிய நாட்டை அரசு செய்கிறாள். அப்படி அரசு செய்யும்போது திக்விஜயம் செய்யப் புறப்படுகிறாள். திக்விஜயத்தில் அரசர்கள் மாத்திரம் அல்ல, திக்கு பாலகர்களுமே தலை வணங்குகிறார்கள். வெற்றிமேல் வெற்றி பெற்று இமயத்தையே அடைகிறாள். பகீரதியில் முழுகுகிறாள். மேருவை வலம் வருகிறாள். கடைசியில் கைலாசத்துக்கே வந்துவிடுகிறாள், அங்கு கைலாசபதி சாந்த ரூபத்தோடு பினாகபாணியாக அவள் முன் வந்து சேருகிறார். எல்லோரையும் வெற்றிகண்ட பெண்ணரசி, இந்தச் சுந்தரன் முன்பு நாணித் தலை கவிழ்கிறாள், தடாதகையின் பின்னாலேயே மதுராபுரிக்கு வந்துவிடுகிறார் சுந்தரர். சோமசுந்தரனாக மதுரைத் தடாதகையை மணம் புரிந்து கொள்கிறார். மலயத்துவஜன் ஸ்தானத்தில் தடாதகையின் சகோதரனான சுந்தரராஜனே கன்யாதானம் செய்து தாரை வார்த்துக்கொடுக்கிறார். அன்று முதல் சோமசுந்தரர் தம் மனைவியின் நிழலிலேயே ஒதுங்கி வாழ்கிறார். இந்தத் திருமண வைபவத்தைத்தான் இன்றும் சித்திரைத் திருவிழாவாக மதுரையில் மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி நடக்கும் தங்கையின் திருமணத்துக்கே தந்தப் பல்லக்கு, முத்துக்குடை., தங்கக் குடம் முதலிய சீர்வரிசைகளுடன் அழகர் கோயிலில் இருந்து சுந்தரராஜன் வந்து சேருகிறார். இத்திருமணக் கோலத்தைப் பரஞ்சோதி முனிவர் சொல்லில் வடிக்கிறார்.

அத்தலம் நின்ற மாயோன்
ஆதி செங்கரத்து நங்கை
கைத்தலம் கமலப்போது
பூத்ததோர் காந்தள் ஒப்ப