பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

137

ஆறுபடை வீடுகளில் முதல் படைலீடாகத் திகழ்வதும் திருப்பரங்குன்றம்தான். அந்தத் திருப்பரங் குன்றத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

மதுரைக்குத் தென்மேற்கே ஆறு மைல் தூரத்தில் திருப்பரங்குன்றம் இருக்கிறது. மதுரையில் இறங்கி பஸ்ஸிலோ, காரிலோ செல்லலாம். இல்லை, திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலே இறங்கி நடந்தாலோ கூப்பிடும் தூரம்தான். எந்த வழியாக வந்தாலும் தூரத்திலேயே தெரிவது குன்று. இக்குன்றின் உயரம் 1056 அடி என்று கணக்கிட்டிருக்கின்றனர், குன்று சிவலிங்க வடிவமாக இருப்பதால் இதனைச் சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருக்கின்றனர். முருகன் எழுந்தருளியுள்ள தலமாதலால் கந்தமலை என்று வழங்கியிருக்கிறது. இதனையே பின்னர் திரித்துச் சிக்கந்தர் மலை என்று முஸ்லீம்கள் அழைத்திருக்கின்றனர். திருப்பழனம், . திருப்பயணம் என்றாகிக் கடைசியில் பிரஸ்தான புரியான கதைப்போலத்தான். எங்கிருந்து வந்தாலும் முதலில் நாம் சென்று சேருவது குன்றின் வட பகுதியில் உள்ள சந்நிதி வாயிலில்தான்.