பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

முருகவேள் இருக்கிறார். சிற்ப வடிவங்களெல்லாம் சிதைந்திருக்கின்றன. இது பல்லவர் குடைவரைபோல் இருந்தாலும், பாண்டிய மன்னர்கள் தாம் இக்குடைவரையை வெட்டியிருக்கவேணும்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட மாறவர்மன், சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள் இங்கே இருக்கின்றன. மேற்குப் பக்கத்தில் செங்குத்தாக மலையிருக்கிறது. அங்குள்ள குகையில் ஆறு படுக்கைகள் இருக்கின்றன. இதில் ஏறுவது கடினமாக இருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டிலே ஆங்கிலேயர் இந்தப்பகுதியைக் கைப்பற்றியபோது குட்டி என்ற ஒரு பக்தன் மலையிலிருந்து குதித்து இக்கோயிலைக் காப்பாற்றினான் என்று வரலாறு. அதற்காக அவன் வாரிசுகளுக்கு நிலதானம் வேறே செய்திருக்கின்றனர். இந்த மலையில் மகமதியரும், இந்துக்களும் சேர்ந்தே தொழுகின்றனர். சமரஸ பாவத்தை ஸ்கந்தர்மலை, சிக்கந்தர்மலை என்ற பெயரோடு வளர்த்து வருவது அறிந்து இன்புறத்தக்கதுதானே.