பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்

பக்தி பண்ணுவதற்குப் பாவனை அவசியம், அந்தப் பாவனை எத்தனை எத்தனையோ வகையில் அமைதல் கூடும். அப்படிப் பாவனை செய்வதில் நான்கு பாவனைகள் முக்கியமானவை. இறைவனைத் தனயனாகப் பாவனை பண்ணிப் பக்தி செலுத்துவது ஒருமுறை. அதுவே வாத்சல்ய பக்தி எனப்படும் இறைவனை ஆண்டானாகப் பாவனை பண்ணி அவனது தாஸனாக மாறிச் சேவை செய்வது ஒரு முறை. அதுவே தாஸ்ய பக்தி. இறைவனை அருமைத் தோழனாகவே கொண்டு அவனோடு நெருங்கி உறவாடிப் பக்திப் பண்ணுவது ஒரு முறை. இதனையே ஸக்ய பக்தி என்பர். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனையே காதலனாகப் பாவனை பண்ணி அவனிடத்தில் காதலைச் செலுத்தி வழிபடுவது, இதனையே மதுர பக்தி என்பர். இந்த மதுர பக்தியிலே பல மாதர்கள் தமிழ்நாட்டில் திளைத்திருக்கிறார்கள். பாடல்கள் பாடித் தங்களது பக்தி அனுபவத்தை எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள். என்றாலும் வெறும் பாவனையோடு நிற்காமல், இறைவனாம் பரந்தாமனையே காதலனாக வரித்து அவனையே மணாளனாகப் பெற்றுப் பெருமையுற்றவள் ஆண்டாள். அந்த ஆண்டாள் பிறந்து வளர்ந்த இடம்தான் ஸ்ரீ வில்லிப்புத்தூர். அந்த ஸ்ரீ வில்லிப்புத்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் தென்காசி-விருதுநகர் ரயில் பாதையில் உள்ள ஊர். ஆதலால் ரயிலில் செல்வோர் எளிதாக அவ்வூர் சென்று சேரலாம், மோட்டாரில் மதுரையிலிருந்து திருமங்கலம் வந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் சென்றாலும் சென்று