பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

147

பாமாலைகள் சாத்தவும் முற்படுகிறாள். வளர்ந்து பருவமங்கையானதும் தன் காதலனாக பெருமாளையே வரிக்கிறாள். 'மாலிருஞ்சோலை எம்மாயற்கு அல்லால் மற்றொருவர்க்கு என்னைப் பேச ஒட்டேன்' என்று சாதிக்கிறாள், 'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் முறை தாழ்ந்த பந்தற்கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து கைத்தலம் பற்றி' மணமாலை சூட்டக் கனாக் காண்கிறாள்.

இப்படி இவள் சொல்லிக் கொண்டிருக்கிறாளே என்று பெரியாழ்வார் கவலையடைய, ஆழ்வாரது கனவிலே திருவரங்கச் செல்வனே வந்து கோதையைத் திருவரங்கம் அழைத்து வரவேண்டும் என்றும், அங்கு தாமே அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கொல்கிறார். ஆண்டாளை மணிப்பல்லக்கிலே ஏற்றி வாத்திய கோஷங்களுடன் திருவரங்கத்துக்கு அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள். சுரும்பார் குழல் கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கம் தொழுதேசியள் வந்தாள் என்று அவளை எதிர்கொண்டு அழைக்கின்றனர். சூடிக்கொடுத்த நாச்சியாரும் எல்லோரும் காணும்படி அழகிய மணவாளன் திருமுன்பு சென்று அவன் திருவடி வருடி அவனுடன் ஒன்றறக் கலக்கிறாள். இதைப்பார்த்த பெரியாழ்வார், 'ஒருமகள் தன்னை உடையேன். உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்' அவளைச் செங்கண்மால் தான் கொண்டு போனான் என்று துக்கித்துப் பெருமாளிடம், கோதையைப் பலர் அறிய ஸ்ரீ வில்லிப்புத்தூரிலேயே திருமணம் செய்தருள வேண்டும் என்று வேண்ட, அழகிய மணவாளனும் அப்படியே செய்கிறேன் என்று பங்குனி உத்திரத்தன்று கருடாழ்வாரின் மீது கோதையுடன் வந்து திருமணம் செய்து கொள்கிறார்.

அன்று முதல் ரங்கமன்னார் கோதையுடனும் பெரிய திருவடியுடனும் ஸ்ரீ வில்லிபுத்தூரிலேயே கோயில் கொண்டு விடுகிறார். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பாடிய பாசுரங்களே