பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்கணியை வழங்கியிருக்கிறார். திருமலை நாயக்கரும் இக்கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கிறார். அவரது சிலை ஆண்டாள் கோயிலில் சுக்கிரவாரக் குறட்டில் ஒரு கம்பத்தில் இருக்கிறது.

கோதையையும் பெரியாழ்வாரையும் பற்றிப் பின் வந்தவர்கள் பாடிய பாடல்கள் அனந்தம். அவைகளில் கோதையைப் பற்றி உய்யக் கொண்டார் பாடிய பாடல் பிரசித்தம்.

அன்னவயல் புதுவை
ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை
பல்பதியம்,-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்
நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

என்பது பாடல். நாமும் பெருமாளுக்குப் பூமாலையும், நமக்குப் பாமாலையும் பாடிக் கொடுத்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை வாழ்த்தி வணங்கி ஊர் திரும்பலாம்.