பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

155

உள்ள மக்களுள் சிவனை வழிபடும் சைவர்கள் உண்டு. விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள் உண்டு. இவர் ஏதோ அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை மட்டும் வழிபட்டார்கள் என்று இல்லை. ஒருவர் மற்றவரைக் குறை கூறுவது, அவர்களோடு வாதிடுவது என்று நெடுகிலும் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரன் அதிகன் என்று சைவர் சொன்னால், இல்லை உலகளந்த அரி அதிகன் என்றே வாது செய்திருக்கிறார் வைஷ்ணவர். 'ஆலம் உண்டான் எங்கள் நீலகண்டன்' என்று சைவர் வீறாப்புக் கூறினால் வைஷ்ணவரும் விட்டுக் கொடுக்காமலேயே 'அண்டம் உண்டபோது அந்த ஆலம் உண்ட கண்டனையும் கூட உண்டிருக்கிறான் எங்கள் மால்' என்று பேசியிருக்கிறார்.

மக்களில் மாத்திரம் அல்ல நாகர்களிலும் இச்சைவ வைஷ்னவச் சண்டை நடந்து வந்திருக்கிறது. சங்கரன், பதுமன் என்று இரண்டு நாகர்கள். சங்கரன் சிவபக்தன், பதுமன் விஷ்ணு பக்தன். இவர்களுக்குள்ளும் இந்த வாதம். இப்படிப் பலர் வாதிட அன்னை கோமதிக்கே, ஆம், பார்வதிக்கே சந்தேகம் வந்துவிடுகிறது. இருவரும் ஒருவரேதாமா, இல்லை வேறு வேறு நபர்கள்தாமா என்று. இதைக் கேட்டிருக்கிறாள் அவள் இறைவனிடம், அவர் என்ன அவ்வளவு எளிதில் விடை சொல்லி விடுவாரா? மண்ணுலகத்தில் புன்னை வனத்தில் சென்று தவமிருக்கச் சொல்லியிருக்கிறார். அப்படியே அன்னையும் அங்கு வந்து தவம் கிடக்கிறாள். ஆடி மாதம் பௌர்ணமி அன்று சங்கரனார் சங்கர நாராயணர் உருவில் வந்து அம்மைக்குக் காட்சி கொடுத்திருக்கிறார். சங்கரன் கோயிலில் சிறப்பாக நடைபெறும் ஆடித் தவசு உற்சவம், இந்தச் சங்கர நாராயணர் காட்சியை விளக்க எழுந்ததே. இந்த சங்கர நாராயணர் கோலத்தைத்தான் பொய்கை ஆழ்வார்,

அரன் நாரணன் நாமம்
ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை: உறையும்
கோயில் - வரைநீர்