பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வேங்கடம் முதல் குமரி வரை

நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட பரகேசரிவர்மன் என்னும் முதல் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு சோழ நாட்டுடன் இணைந்திருக்கிறது. இன்னும் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்திய நிபந்தங்களை யெல்லாம் குறிக்கும் கல்வெட்டுகள் உண்டு. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பல திருப்பணிகள் செய்திருக்கிறான். இப்படிச் சோழரும் பாண்டியருமாகக் கட்டிய கோயிலை, சொக்கம்பட்டி குறுநில மன்னர்களும் விரிவுபடுத்திப் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். குழல்வாய் மொழி அம்மை கோயிலைத் தேவகோட்டை காசி விசுவநாதன் செட்டியார் குடும்பத்தினர் திருப்பணி செய்திருக்கின்றனர். கோயிலில் திருப்பணி வேலைகளை இப்போதும் செவ்வனே செய்து வருகின்றனர்.

இக்கோபிலை விட்டு வெளியே வந்ததும் நேரே ஊர் திரும்ப முடியாது. கோயிலுக்கு வடபுறம்தான் இத்தலத்தில் பிரசித்தி பெற்ற சித்திர சபை இருக்கிறது. அம்பலக் கூத்தன் ஐந்து திருச்சபையில் அவள் கூத்தை ஆடியிருக்கிறான். திருவாலங்காட்டில் ரத்ன சபையிலும், சிதம்பரத்தில் பொன்னம்பலத்திலும், மதுரையில் வெள்ளியம்பலத்திலும், திருநெல்வேலியில் தாமிர சபையிலும் ஆடிய பெருமான் இத்தலத்தில் சித்திர சபையில் நின்று நிருத்தம் ஆடியிருக்கிறார். ஐந்தருவிக்குச் செல்லும் ரோட்டில், ரஸிகமணி டி. கே, சி நினைவு இல்லத்துக்குக் கீழ்ப்புறமாகச் செல்லும் பாதையில் சென்றால் சித்திர சபை சென்று சேரலாம். இச்சபையே தெப்பக் குளத்துடன் கூடிய ஒரு பெரிய கோயில். கோயில் முழுதும் சித்திரங்களால் நிறைந்திருக்கின்றன. பெருமானும் இங்கே சித்திர உருவிலேயே அமைந்து ஆடும் காட்சி தருகிறார். ஆதலால் சித்திர சபையைக் காணாது திரும்பினால் திருக்குற்றாலத்தைப் பூரணமாகக் கண்டதாகக் கூறமுடியாது.

குற்றாலநாதர், குழல்வாய் மொழி, குற்றாலத்துக் கூத்தர் எல்லோரையும் பார்த்தபின் அவகாசமிருந்தால் வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள இலஞ்சிக் குமரனையும் காணலாம். இன்னும் நாலு மைல்கள் வடக்கே சென்று திருமலை சென்று மலை ஏறி