பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வேங்கடம் முதல் குமரி வரை

கோலத்தில், அகத்தியருக்கு காட்சி கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள், நல்ல அற்புதமான வடிவம். இச்சிலை வடிவினைப் பார்க்கும் போது, குற்றாலத் தலபுராண ஆசிரியர் நாட்டு ஞாபகத்துக்கு வராமல் போகாது.

மருமலர் விதான வேள்வி
மண்டடம் கடந்து உள்போகித்
திருமண அறையில் மேவி
தேவியும் தாமும் ஆக
அருள் மணக் கோலக் காட்சி
அருளி வீற்றிருந்தார் மன்னோ !
கருதுவார் கருதும் வண்ணம்
காட்சி தந்தருளும் வள்ளல்.

ரிஷபத்தின் காம்பீரியம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும், கீழே தரையில் அகத்தியரும் அவரது மனைவி லோபாமுத்திரையும் கூப்பிய கையராய் நின்று கொண்டிருக்கிறார்கள் சிலை உருவில், குன்டோதரன் வெண் கொற்றக் குடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இந்த அறையிலேயே மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி பூதேவி சகிதம் எழுந்தருளியிருக்கிறார், செப்புச் சிலை வடிவில் பக்கத்திலே. அகத்தியரும் லோபா முத்திரையும் செப்புச் சிலை வடிவிலும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தரிசித்த பின்னர் கோயிலைச் சுற்றிக்கொண்டு வந்தால் இறைவனுக்கு இடப் பக்கத்தில் உலகம்மை சந்நிதி இருக்கிறது. இவள் வரப்பிரசித்தி உடையவள். முக்களாலிங்கர், மூவர் முதலிகளின் பாடல் பெற்றவர் அல்ல. ஆனால் இந்த உலகம்மையை விக்கிரமசிங்கபுரவாசியான நமச்சிவாய கவிராயர் பல பாடல்களால் பாடிப் பரவியிருக்கிறார். உமையே உலகம்மையாக இருக்கிறாள் என்பதையும் அவளையே இமவான் மனைவியான மேனை பெற்றெடுத்திருக்கிறாள் என்றும் கவிஞர் கூறுகிறார்.

தீட்டுதமிழ் மாமுனிக்குச்
சித்திரை மாதப்பிறப்பில்
காட்டுமணக் கோலம் எந்தக்
காலமும்நான் காண்பேனா?