பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

ராஜகோபாலனையும் இக்கோயிலில் எழுந்தருளச் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். அங்குள்ள அர்ச்சகர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. க்ஷத்திரியராம் குலசேகரரது ஆராதனை மூர்த்திகளைக் கோயிலுள் எழுந்தருளப்பண்ண இயலாது என்பது அவர்களது வாதம், அன்றிரவு திரு விசாகம் ஆனதும், கோயில் ஆழ்வாரைக் கொண்டு சந்நிதி முன் வைத்துப் பெருமாளைப் பிராத்தித்துக் கொண்டே இருந்திருக்கிறார் குலசேகரர். மறுநாள் விடியற்காலையில் கதவைத் திறந்தால் உள்ளே. சக்ரவர்த்தித் திருமகனும் ராஜகோபாலனும் எழுந்தருளியிருக்கிறார்கள். உடனே எல்லோரும் குலசேகரர் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவர் பக்திப் பெருமையை உணர்ந்திருக்கிறார்கள், குலசேகரர் பின்னர் அத்தலத்திலேயே தங்கித் தமது 87-வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளியிருக்கிறார்.

ஆதியில் இத்தலம் வேத நாராயணபுரம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கல்வெட்டுக்களிலிருந்து கன்ணனுக்கு ஒரு கோயில் இவ்வூரில் இருந்திருக்கவேணும் என்று தெரிகிறது. அக்கோயில் இப்போது இல்லை. உடைந்த வேணுகோபாலன் கற்சிலையும், ருக்மணியின் கற்சிலையமே கிடைத்திருக்கின்றன. கோயிலுள் ஒரு நவநீதகிருஷ்ணன் விக்கிரகம் மட்டும் இருக்கிறது. பிரம்ம வித்துவான்கள் நிறைந்த ஊராகையால், பிரம்ம வித்துவான்களுக்குப் பாண்டிய அரசர்களால் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊராகையால், இதனைப் பிரமதேயம் என்றும் அழைத்திருக்கின்றனர்.

இந்த ஊருக்கு மன்னார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்பதைச் சொல்லவில்லையே என்றுதானே குறைப்படுகிறீர்கள்? குலசேகரருக்கு ராஜகோபாலன் என்ற அழகிய மன்னனார் பேசும் தெய்வமாக இருந்திருக்கிறார். அத்துடன் குலசேகர மன்ளன் பெயரையும் தொடர்புப் படுத்தி மன்னனார் கோயில் என்று முதலில் வழங்கியிருக்கவேணும். பிறகு மன்னார் கோயில் என்று குறுகியிருக்க வேணும்.