பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23. திருநெல்வேலி உறை செல்வர்

ஒரு கவிஞன்; கவிஞன் என்றால்தான் வறுமையும் உடன்பிறந்து வளருமே. அந்த வறுமை காரணமாக வாடுகிறான், வருந்துகிறான். கவிஞனோ அந்தத் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிக்காரள். நல்ல தெய்வபக்தி உடையவன். ஒவ்வொருநாளும் அவன் கோயில் சென்று இறைவனை வழிபட மறவாதவன். கோயிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் வேணுவனநாதர், நெல்லையப்பரிடம் தன் குறைகளைச் சொல்கிறான். தன் வறுமையை நீக்க வேண்டுகிறாள். ஆனால் நெல்லையப்பரோ இவனது குறைகளைத் தீர்க்கிறவராகக் காணோம். ஏன்? காது கொடுத்துத்தான் கேட்கிறாரா என்பதே சந்தேகம். இப்படிக் கழிகிறது பல நாட்கள். இந்தக் கவிஞன் ஒருநாள் அன்னை காந்திமதியின் சந்நிதிக்கு வருகிறான், அம்மன் கோயில் வாயில் வழி நுழைந்தவன் ஊஞ்சல் மண்டபம், மணி மண்டபம், நடு மண்டபம் எல்லாம் கடந்து கருவறைப் பக்கமே வந்து சேருகிறான். அங்கே நிற்கும் அன்னையைப் பார்க்கிறான். அவளோ, தலையில் வைர மணிமுடி, ராக்காடி எல்லாம் அணிந்திருக்கிறாள். மூக்குப் பொட்டு, மூக்குத்தி, புல்லாக்கு எல்லாம் அழகு செய்கின்றன; மார்பில் நவமணி வடம் புரள்கிறது. அடிகளில் மணிச் சிலம்பு ஒலிக்கிறது. வலக்கையை உயர்த்தி அதில் கிளியுடன் கூடிய செண்டு ஒன்று எந்தி, இடக்கையைத் தாழ்த்தி நிற்கும் அந்த வடிவழகியை ஒரு புதுமணப் பெண்ணாகவே காண்கிறான் கவிஞன். அப்போது தோன்றுகிறது கவிஞனுக்கு ஏன், இந்த அன்னையின் மூலமாகவே தனது விண்ணப்பத்தை அந்த வேணுவன நாதரிடம் சமர்ப்பிக்கலாகாது என்று. அப்படி அவள் தனக்காகத் தன் கணவரிடம் பரிந்து பேச நல்ல வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதையுமே அறிகிறான். இந்த எண்ணத்திலே உருவாசிறது பாட்டு