பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வேங்கடம் முதல் குமரி வரை

இருந்திருக்கிறது. ராமக்கோன் என்று ஒருவன். அவன் தினசரி தன்னுடைய மாட்டுப் பட்டிக்குச் சென்று பால் கறந்து அந்தப் பால் நிறைந்த குடத்துடன் தன் இல்லத்துக்குத் திரும்புவான். அப்படி வரும்போது ஒவ்வொரு நாளும் ஒரு மூங்கில் புதரண்டை கால் தடுக்கிப் பால் குடம் விழுந்து பால் முழுதும் சிந்தியிருக்கிறது. சில நாள் இப்படி . நடக்கவே மறு நாள் கோடாரியுடன் வந்து அந்த மூங்கில் புதரை வெட்டி அகற்ற முனைந்திருக்கிறான். அப்படி வெட்டும் போது வெளிப்பட்டவரே வேணு வனநாதர், அவரை முழுவதும் கண்ட ராமக்கோன் (ராம பாண்டிய ராஜா என்று அழைக்கப்படுகிறார் பின்பு) வேண்டியபடியே வளர்ந்திருக்கிறார் இவர். இந்த சுயம்புமூர்த்தியை இன்னும், வேண்ட வளர்ந்த நாயகர் என்றே அழைக்கிறார்கள், இவரே கருவறையுள் வெட்டுப்பட்ட தலையோடு இருக்கிறார். கோயிலின் முதல் பிராகாரத்திலே ஒரு பள்ளமான இடத்திலே மூலலிங்கர் வேறே இருக்கிறார்.

இந்த வேணுவன நாதர் எப்படி நெல்வேலி நாதர் ஆனார்? வேத சர்மா என்று ஓர் அர்ச்சகர். கோயில் பூசைக்கு வேண்டிய நெல்லை எடுத்துத் தம் வீட்டின் முற்றத்தில் வெயிலில் உலர்த்தி விட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் பெருமழை பெய்திருக்கிறது. உலர்த்திய நெல் எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விடுமே என்னும் ஆதங்கததோடு அர்ச்சகர் வீடு நோக்கி ஓடி வருகிறார். அர்ச்சகரின் அன்பினையும் ஆதங்கத்தையும் அறிந்த இறைவன், அந்த நெல்காய்ந்த இடத்தில் ஒரு துளி மழையும் விழாமல் காத்திருக்கிறார். அப்படி அவர் வேலி போல் நின்று காத்த தன் காரணமாக நெல்வேலி நாதன் என்று பெயர் பெறுகிறார். நெல்வயல்கள் ஊரைச் சுற்றி நாலு பக்கங்களும் பரவி நிற்கிறதைப் பார்த்தவர்கள் இந்த ஊருக்கு நெல்வேலி என்ற பெயர் பொருத்தமே என்று ஒப்புக் கொள்வார்கள்.

இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்து பாடிப் பரவியிருக்கிறார்.

மதுரையைத் தலைநகராகக் கொண்ட அந்த நின்ற சீர்நெடுமாறனே இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு.