பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

வேங்கடம் முதல் குமரி வரை

தவழ்ந்து கோயில் பிராகாரத்திலுள்ள புளிய மரத்தடியில் அமர்ந்து கொண்டார். உணவும் நீரும் இன்றி வாழ்ந்தாலும் குழந்தையின் உடல் வளர்ச்சி குன்றவில்லை. பதினாறு பருவங்கள் இப்படியே கடந்தன. இந்த நிலையில் வட நட்டுக்கு யாத்திரை சென்றிருந்த மதுரகவி என்னும் அந்தணர், தென் திசையில் ஒரு பேரொளியைக் சண்டார். அவ்வொளியை நோக்கி நடந்து வந்து புளியமரத்தின் பொந்தில் இருந்த சடகோபரைக் கண்டார். மதுரகவியார் கேட்ட வினாக்களுக்கு இவர் அளித்த பதிலைக் கேட்டு அவரை மகாஞானி என்று உணர்ந்தார். இவரே காலக்கிரமத்தில் திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்ற திவ்யப் பிரபந்தங்களைப் பாடி அருளினார். நம்மாழ்வார் என்றும் புகழ் பெற்றவரான இவரே, ஆழ்வார்களுக்குள் தலையாய ஆழ்வாராக விளங்குபவர். இவரே வேதம் தமிழ் செய்த வித்தகர், வகுள பூஷ்ண பாஸ்கரர், நம்மாழ்வார், உலகுய்யத் தோன்றிய குரு மூர்த்திகளுள் முதன்மையானவர். இயல்பாய் மெய்புலர்வு பெற்று எல்லாவற்றுக்கும் அடிப்படையான வித்தினை உணர்ந்தவர். உணர்ந்தவாறே உலகுக்கு உணர்த்தியவரும் கூட. இந்த ஆழ்வார்திருநகரிக்கே ஒரு கவிஞர் வந்திருக்கிறார். அவருக்குத் திருநகரி வந்ததும் ஓர் எக்களிப்பே உண்டாகிறது. அந்த எக்களிப்பில் பாடுகிறார்.

இதுவோ திரு நகரி?
ஈதோ பொருதை?
இதுவோ பரமபதத்து
எல்லை?-இதுவோ தான்
வேதம் பகர்ந்திட்ட
மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்?

என்று. இந்த நம்மாழ்வார் பிறந்து வளர்ந்த காரணமாகவே குருகூர், ஆழ்வார்திருநகரி என்ற பெயரோடு வழங்குகிறது.