பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேங்கடம் முதல் குமரி வரை
- பொருநைத் தரறையிலே -
1. பழநி ஆண்டவன்

'மணங் கமழ் தெய்வத்து இளநலம்' காட்டுபவன் முருகன் என்பார் நக்கீரர். இளைஞனாக, அழகனாக மட்டும் இருப்பவன் இல்லை முருகன். சிறந்த அறிஞனாசுவும் இருக்கிறான். ஞானப் பழமாக அன்னைக்கும், ஞான குருவாகத் தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய வரலாறுகள் கூறுகின்றன? ஞானப் பழமாக அவன் நிற்கிற நிலைக்கு ஒரு நல்ல கதை. அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் கயிலை மலையிலே அமர்ந்திருக்கிறார்கள் ஒரு நாள். அங்கு வந்து சேருகிறார், கலகப் பிரியரான நாரதர். வந்தவர் சும்மா வரவில்லை . கையில் ஒரு மாங்கனியையுமே கொண்டு வருகிறார். அதனை ஐயனிடம் கொடுத்து அவன்தன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம். அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்கவேண்டும் ஒரு நன்மை. நாரதர் தந்த கனியைச் சிவபிரான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஓர் ஆசை, மக்கள் இருவருக்கும் கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு களிக்கலாமே என்று. அந்த எண்ணம் தோன்றிய உடனேயே, மக்கள் இருவரும்-விநாயகரும் முருகனும்தான் வந்து சேருகின்றனர். அதற்குள் நினைக்கிறார் சிவபெருமான், அக்கனி மூலம் ஒரு பரீட்சையே நடத்தலாமே என்று. உங்கள் இருவருக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே இக்கனி என்கிறார் தம் பிள்ளைகளிடம்.

இந்தப் போட்டியில் மூஷிகவாகனனான விநாயகர் வெற்றி பெறுவது ஏது என்று நினைக்கிறான் முருகன். தன் மயில் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'ஜம்' என்று வான வீதியிலே புறப்பட்டு விடுகிறான் அவன். பிள்ளையார், நிறைந்த ஞானவான் அல்லவா? அவர் தம் வாகனத்தில் எல்லாம் ஏறவில்லை . மிக அமைதியாகக் காலால்