பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வேங்கடம் முதல் குமரி வரை

அவனையும் உடன் கூட்டிச் செல்கிறார். அங்கே முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தவன்தான் அவன் ஆகவே நண்பருடன் கடற்கரையிலே உள்ள அந்த முருகன் கோயிலுக்கு செல்கிறான்.

அலை வந்து மோதும் அத்திருச் சீரலை வாயிலின் கோயிலைச் சுற்றி வந்து தென் பக்கத்திலுள்ள சண்முக விலாத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைகிறான். அத்தனை நேரமும் கூனிக் குறுகி நடந்த கவிஞன் நிமிர்ந்து நோக்குகிறான். அப்போது அவனுக்கு நேர் எதிரே சண்முகன் காட்சி கொடுக்கிறான், அங்கே செப்புச் சிலை வடிவில் நிற்கும் சண்முகன் பாலனும் அல்ல பால சந்நியாசியம் அல்ல, ஓராறு முகங்களும், ஈராறு கரங்களும் கொண்ட சண்முகநாதனே வேலேந்திய கையுடன் வீறுடன் நிற்கிறான். ஒரே தங்க மயமான பொன்னாடை புனைந்து ரத்ன சகிதமான அணிகளையும் அணிந்து நிற்கிறான். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் ஒன்றே ஒரு லட்சம் ரூபாய் பெறும். கையில் ஏந்தியிருக்கும் வைர வேலோ எளிதாக இரண்டு லட்சம் ரூபாய் பெறும். ஆளுக்கே கொடுக்கலாம் ஐந்து லட்சத்துக்கு ஜாமீன். அத்தனை சௌகரியத்துடன் செல்வந்தனாகக் கம்பீரமாக நிற்கிறான். இவ்வளவுதானா? இந்த அழகனுக்கோ ஒன்றுக்கு இரண்டு மனைவியர். அழகனுக்கு ஏற்ற அழகிகளாக, அன்னம் போலவும், மயில் போலவும் விளங்குகிறார்கள். வஞ்சனை இல்லாமல் மனைவியர் இருவருக்கும் அழகான ஆடைகளையும் அளவற்ற ஆபரணாதிகளையும் அணிவித்து. அழகு செய்திருக்கிறான்.

இதையெல்லாம் பார்த்த கவிஞனுக்கோ ஒரே கோபம் 'இன்னுமா இவன் சின்னப் பிள்ளை? என் குறைகளையெல்லாம் நான் முறையிடாமலேயே அறிந்து கொள்ளும் வயது இல்லையா? இல்லை, ஆற்றல் தான் இல்லையா? ஏன் இவன் நம் துயர் துடைத்திருக்கக் கூடாது?' என்றெல்லாம் குமுறுகிறான். குமுறல் எல்லாம் ஒரு பாட்டாகவே வெளிவருகிறது.