பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேங்கடம் முதல் குமரி வரை

நடந்தே அன்னையையும் அத்தனையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றுகிறார். மாங்கனிக்குக் கைநீட்டுகிறார். 'என்னடா? உலகம் சுற்றியாகி விட்டதா? என்று தந்தை கேட்டால், 'உலகம் எல்லாம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே! உங்களைச் சுற்றினால் உலகத்தையே சுற்றியதாகாதா? என்று எதிர்க் கேள்வி போடுகிறார். இந்தப் பதிலை எதிர்க்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார் அத்தனும், போட்டியில் வெற்றி பெற்ற மகனாம் விநாயகருக்கு. உலகம் எல்லாம் சுற்றி அலுத்து வந்த முருகன் விஷயம் அறிகிறான். 'அடே! இந்த அண்ணன் கனியைத் தன் மூளையை உபயோகித்து அல்லவா பெற்றுவிட்டான்? நாமும் இன்று முதல் ஞானவானாகவே விளங்க வேண்டும்' என்று நினைக்கிறான்.

ஞானம் பெறத் தடையாயிருக்கும் தனது உடைமைகளை எல்லாம் துறக்கிறான். கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு வெளியேறிவிடுகிறான். தாயாம் பார்வதிக்கோ தன் பிள்ளை இளவயதிலேயே காவி உடுத்திக் கோவணாண்டியாகப் போவதில் விருப்பம் இல்லை. அதனால் பிள்ளையைப் பார்த்து. 'அப்பா! நீயே ஞானப் பழமாக இருக்கும் போது நாங்கள் வேறு உனக்குப் பழம் கொடுக்க வேண்டுமா? என்று கூறிச் சமாதானம் செய்கிறாள். முன் வைத்த காலைப் பின் வாங்காத ஞானப்பழமான முருகன் பழநி மலை மீது நின்று விடுகிறார். பழம் நீ என்பது தான் பழநி என்று ஆகியிருக்கிறது என்பது புராண வரலாறு, இல்லை , இந்த இடம் பொதினி என்று இருந்திருக்கிறது. பொதினி என்ற பதமே மருவிப் பழநி என்று ஆயிற்று என்று கூறுவர் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர்கள். அதற்கு அகநானூற்றில் உள்ள,


வண்டு படத் துதைந்த கண்ணி யொண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கன்

என்னும் மாமூலனார் பாட்டையும் ஆதாரங்காட்டுவர். பொதினியாயிருக்கட்டும், இல்லை பழம் நீ எனவே இருக்கட்டும். பழநி ஒரு பழமையான தலம். அங்கே கோயில் கொண்டிருப்பவன்