பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

229

வேண்டியபடித் தேவதச்சனான மயனே முதலில் கோயில் கட்டினான் என்பது வரலாறு. மயன் கட்டிய கோயில் நாளும் விரிவடைந் திருக்கிறது. பாண்டிய மன்னர்களும் சேர மன்னர்களும் இக்கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறார்கள். வரகுணமாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியன் முதலியோர் கோயிலுக்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கின்றன. கி.பி. 1729 முதல் 1758 வரை திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்டவர்ம மகாராஜா இக்கோயிலில் உதய மார்த்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலும், மௌனசுவாமி என்பவர் கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்தியவர் வள்ளிநாயக சுவாமிகள், இன்று விரிவடைந்திருக்கும் கற்கோயில், ராஜகோபுரம், பிராகாரங்கள் எல்லாம் இவர்களது திருப்பணி வேலைகளே. முருகன் கோயில்களில் எல்லாம் சிறப்பான கோயிலாக இருப்பது இந்தச் செந்திலாண்டவன் கோயிலே.