பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வேங்கடம் முதல் குமரி வரை

பெற்றவர். இன்றும் இம்மூலமூர்த்தியைச் சுற்றியே ஒரு பிராகாரம். அங்குதான் முப்பத்திரண்டு முனிவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான் ரோமரிஷி. வைகாசன முனி, தும்பிக்கை ஆழ்வார் முதலியோர் எல்லாம் அங்கே இருக்கின்றனர். இத்தலத்தின் சிறப்பு, இங்கு நடக்கும் எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனமே. ஆறுபடி நல்லெண்ணெய்யைச் சந்தன எண்ணெய்யுடன் சேர்த்துத் தினசரி காப்பு நடக்கிறது. விசேஷ காலங்களில் நூற்றிப் பன்னிரண்டுபடி எண்ணெய்க் காப்பு நடக்கும். இப்படித் தோத்தாத்திரி நாதருக்குத் திருமஞ்சனம் செய்யப்பட்ட எண்ணெயை ஓரிடத்தில் சேகரித்துப் பின்னர் அதனை வீரப்ப நாயக்கன் மண்டபத்துக்குப் பின்னால் உள்ள எண்ணெய்க் கிணற்றில் விட்டு விடுகிறார்கள். இந்த எண்ணெய்க் கிணற்றில் நாம் கால்படி நல்லெண்ணெய்யை வாங்கி வந்து ஊற்றி விட்டு அக்கிணற்றிலிருந்து கால்படி எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். கோயில் நிர்வாகிகள் எடுத்துத் தருவார்கள். இந்த எண்ணெய் தீராத சரும வியாதியான குஷ்டம் முதலியவைகளை யெல்லாம் தீர்க்கிறது என்பது நம்பிக்கை, பாட்டில் பாட்டிலாக இந்த எண்ணெய் வடநாட்டுப் பக்தர்களுக்குச் செல்கிறது. இந்த எண்ணெயின் மகிமையை அகஸ்தியரே அவருடைய வைத்திய முறையில் குறித்திருக்கிறார். பிரபல டாக்டர்களும் இந்த எண்ணெயின் மகிமையை உணர்ந்து இதை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பர். ஆதலால் இத்தலத்துக்குச் செல்லும்போது நீங்கள் ஒரு பாட்டில் எண்ணெய் எடுத்து வர மறக்காதீர்கள்,

இன்னும் இக்கோயிலில் உள்ள ராமர் சந்நிதி, கண்ணன் சந்நிதி, சக்கரத்தாழ்வார் இடங்களுக்கும் சென்று கண்டு தரிசித்துத் திரும்பலாம். இத்தலம் வானவாமலை என்று அழைக்கப்படுவதின் காரணம் பாண்டி மன்னன் ஒருவன் வானவன் மாதேவி என்ற சேரகுல மங்கையை மணந்து வானவன் என்ற பட்டத்தையே ஏற்றிருக்கிறான். இந்தப் பாண்டிய மன்னனே முதன் முதலில் இக்கோயிலைக்