பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

249

இம்மண்டபம் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே மன்மதன், ரதி, அர்ச்சுனன், கர்ணன், முதலியோரது சிற்ப வடிவங்கள் இருக்கின்றன, ஊஞ்சல் மண்டபத்திலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வந்து கிழக்குச் சுற்றுக்குச் சென்றால் அங்கே தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. தெற்குப் பிராகாரமும் கிழக்குப் பிராகாரமும் சந்திக்கும் இடத்தில் ஊட்டுப்புறை இருக்கிறது. தெற்குப் பிராகாரத்தின் ஆரம்பத்தில் வசந்த மண்டபம் உண்டு. அந்தப் பிராகாரத்தில்தான் நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர் முதலியோர் உள்ளனர். தெற்குப் பிராகாரத்தில் மேலக் கோடியில் ஐயனார் சந்நிதி. அதை ஒட்டியே ராமஸ்வாமி கோயில்.

ராமரும் சீதையும் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருக்கிறார்கள். லட்சுமணரும் அனுமாரும் கோயில் வாயிலில் நிற்கின்றனர். இந்த வடக்குப் பிராகாரத்திலே தான் சுப்பிரமணியர், காலபைரவர் எல்லாம். சங்கீதத் தூண்கள் வேறே இருக்கின்றன. இப்பிராகாரத்தின் வடகோடியில் சித்திர சபை. சித்திரசபையில் சுவரை ஒட்டிய பிராகாரத்திலே பெரிய ஆஞ்சநேயர் நிற்கிறார். கிட்டத்தட்ட பதினெட்டு அடி உயரத்தில் சிறந்த சிலை உருவில் கம்பீரமாக நிற்கிறார் அவர். சித்திர சபை ஆறடி உயரம் உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்திரண்டடி சதுரம் உடையது இம்மண்டபம், இங்கு கங்காளநாதர், காளி முதவியோர் கற்சிலைகளாக நிற்கின்றனர். இம்மண்டபத்தில் உள்ள சந்நிதியில் ஒரு கண்ணாடி வைக்கப்படிருக்கிறது. அதுவே நர்த்தன மூர்த்தியாகக் கருதப்படுகிறது.

ஊஞ்சல் மண்டபத்துக்குப் பின்னால் தாணுமாலயன் சந்நிதியை நோக்கி நந்தி இருக்கிறது. பன்னிரண்டு அடி உயரமுள்ள நந்தி சுதையால் அமைக்கப்பட்டதே. சந்தாசாகிபு இந்தப் பக்கம் வந்து இக்கோயிலில் உள்ள சிலைகளைப் பங்கப்படுத்தியபோது, இந் நந்தி அவன் கொடுத்த வைக்கோலைத் தின்று சாணம் போட்டது என்றும், அதன் பின்னரே அவன் சிலைகளை உடைப்பதை