பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

251

கவசத்தால் மூடப்பட்டேயிருக்கும். இங்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் பூமிக்குள் சென்று கன்னியாகுமரி தீர்த்தத்தில் கலந்து விடுவதாக நம்பிக்கை; இங்குள்ள கருவறையைச் சுற்றியே துர்க்கை, சங்கரநாராயணார் எல்லாம் இருக்கின்றனர்.

பக்கத்திலுள்ள வீரபாண்டியன் மண்டபத்தைக் கடந்தால் மகாவிஷ்ணுவின் சந்நிதிக்கு வருவோம். அவன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறான். எட்டு அடி உயரமுள்ள கம்பீரமான வடிவம். இந்த விஷ்ணு சிவ சந்நிதிகளுக்குப் பின்னுள்ள சுவரில் பள்ளிகொண்ட பெருமாள் வேறே இருக்கிறார். அவரையே அமர புஜங்கப் பெருமாள் என்பர். செண்பக ராமன் மண்டபத்துக்கு வடபுறம் இருக்கும் கோயில்தான் அறம் வளர்த்த அம்மையின் கோயில். இவள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறாள். தாணுமாலயனைத் தரிசிக்கப் பள்ளியறை நாச்சியார் என்ற வேளாள மாது தன் மகளுடன் வந்ததாகவும் அந்தப் பெண்ணைத் தாணுமாலயன் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டதாகவும் அவளையே அறம் வளர்த்தாள் என்னு பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் வரலாறு. ஒவ்வொரு வருஷமும் மாசி மகத்தன்று தாணுமாலயருக்கும் அறம் வளர்த்தாளுக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடக்கிறது.

கோயிலை எல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டோம், இனி வெளியே வரலாம். ஆமாம், இக்கோயிலிலுள்ள மூர்த்தி தாணுமாலயன் ஆயிற்றே. இத்தலம் மட்டும் சுசீந்திரம் என்று பெயர் பெறுவானேன் என்று கேள்வி எழும் நம் உள்ளத்தில், அகலிகை கதை நமக்குத் தெரியும். இந்திரன் கௌதமரின் மனைவியான அகலிகையை விரும்பியதால் கௌதமர் அகலிகையைக் கல்லாகவும், இந்திரன் உடல் முழுவதும் யோனியாகவும் ஆகும்படி சபிக்கிறார். பின்னர் தேவர்கள் பிராத்தித்தபடி தேவேந்திரன் உடல் எல்லாம் கண்களாகும்படி சாபத்தை மாற்றுகிறார். அந்த இந்திரன் இத்தலத்துக்கே வந்து தவம் கிடந்து சாப விமோசனம் அடைகிறான். அவன் உடலும் சுத்திகரிக்கப்பட்டுப் பழைய உருவை அடைகிறான். இந்திரன் சுசி பெற்ற தலம் 'சுசி இந்திரம்' என்ற பெயரோடு வழங்குகிறது.

இங்குள்ள தாணுமாலயனை ஒவ்வொரு இரவும் தேவேந்திரனே பூஜை செய்கிறான் என்று ஒரு நம்பிக்கை. இங்கு