பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

23

குமான் வாக்களிக்கிறான். இடும்பன் எடுத்துவந்த சிவகிரி, சக்திகிரியே இன்று பழநிமலை, இடும்பன் மலையென நிற்கிறது அங்கே. காவு தடிபிலிருந்தே காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படித்தான் இடும்பன், அருள் பெற்றுப் பழநி மலையிலே பாதி வழியிலே நிற்கிறான். குராவடி வேலவருமே அங்கே கோயில் கொள்கிறார். இவர்களையெல்லாம் வணங்கி விட்டு மேலும் படி ஏறினால் மலைமேல் விரிந்திருக்கும் விசாலயான பிராகாரத்துக்கு வந்து சேருவோம். மலை மேல் கட்டிய கோயில் என்றாலும் பெரிய கோவில்தான். தென்றல் அடிவருட அக்கோயிலுள் மேற்கு நோக்கியவனாகப் பழநி ஆண்டவர் நிற்கிறார். மில்காரர்கள் கட்டியிருக்கும் வித்யாதர மண்டடத்தைக் கடந்தே கோயிலுள் செல்லவேணும். அங்குள்ள மணி மண்டபத்தைக் கடந்துதான் மகா மண்டபத்துக்கு வந்து சேர வேணும். அங்கு இடப்பக்கத்தில் சுப்பிரமணிய விநாயகர் சிலை ஒன்று ஐம்பது வருஷங்களுக்கு முன் நகரத்தார்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அங்கு விநாயகருக்கு வணக்கம் செலுத்திவிட்டே ராஜகோபுரவாயிலைக் கடந்து செல்ல வேண்டும், கோபுரம் 63 அடி உயரமே உள்ள சின்னக்கோபுரம்தான். இனத அடுத்துத்தான் மாரவேள் மண்டபம். இதனை 34 கற்றூண்கள் தாங்கி நிற்கும். இதை அடுத்தே தட்சிணாமூர்த்திக்கும் மலைக் கொழுந்தீசருக்கும் மலைநாச்சியம்மைக்கும் தனித்தனி சந்நிதிகள்.

இதைக் கடந்தே நவரங்க மண்டபம். இதே மண்டபத்தின் வடபக்கத்திலேதான் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே விழாக் காலங்களில் எழுந்தருளும் சின்னக் குமாரரும் இருக்கிறார். இங்குள்ள சண்முகர் வெளியில் எழுந்தருளுவதே இல்லை. இந்த மண்டபத்தையெல்லாம் கடந்தே அர்த்த மண்டபம் வரவேணும், அங்கிருந்தே கருவறையில் தண்டேந்திய கையனாய் நிற்கும் தண்டாயுதபாணியைத் தொழவேண்டும். தண்டாயுத பாணியின் முகத்தில் ஒரு கருணா விலாசம். அருள் கலந்த திருநோக்கு, புன்னகை தவழும் உதடுகள், மதாணி விளங்கும் மார்பு. ஒரு கையை அரையில் வைத்து ஒரு கையில் தண்டேந்தி நிற்கும் நேர்த்தியெல்லாம் கண்குளிரக் கண்டு மகிழலாம். இவர் அபிஷேகப்