பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

257

கரையில் காளியாகவும், மற்றொன்று தென் கோடியில் கடற்கரையில் குமரியாகவும் நின்று நம்மைக் காக்கிறார்கள். பகனுடனும் மூகனுடனும் போர் புரிந்து வெல்கிறார்கள். தேவர்கள் இடுக்கண் தீர்கிறார்கள். புரட்டாசி மாதம் சிவராத்திரி உற்சவத்தில் அம்மை, உச்சைசிரவஸ் என்னும் அமராபதியின் அசுவத்தில் அமர்ந்து போர்க்களம் செல்வதை 'அம்பு சாத்தல்' என்ற பெயரோடு விழா நடத்துகிறார்கள்.

இக்கதைகள் எல்லாம் எப்படியும் இருக்கட்டும். அன்னை பகவதி குமரி முனையில் நின்று தவம் செய்து அதனால் தவ வலிமை பெறுவது மக்களை உய்விக்கவே என்ற எண்ணத்தோடேயே கோயிலுள் நுழையலாம். கோயில் மிகவும் பெரிய கோயிலும் அல்ல; சிறிய கோயிலும் அல்ல. கடல் ஓரமாக உள்ள பெரு வெளியில் நான்கு புறமும் மதில் அமைத்துக் கோயில் கட்டியிருக்கிறார்கள். கோயிலின் பிரதான வாயில் வட பக்கம் இருக்கிறது. முதலில் ஒரு பெரிய பிராகாரம் உண்டு. அதை அடுத்தே துவஜஸ்தம்பம், பலி பீடம் முதலியன இருக்கின்றன. பகவதி அம்மை தினமும் இப்பிராகாரத்தைச் சுற்றி வருவாள். இந்தப் பிராகாரத்தை ஒட்டியே ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இதற்குள்ளே உள்ள அடுத்த பிராகாரம்தான் உள் பிராகாரம்; அங்கே மணிமண்டபமும், சபா மண்டபமும் இருக்கின்றன. மணிமண்டபத்தை ஆறு வட்டத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. மண்டபத்துச் சுவரின் மேல் வரிசையில் புராணச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. மண்டபத்தின் மேற்புறத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேலே உள்ள உள் மண்டபத்தில்தான் கன்னிக்குமரி தவக் கோலத்தில் நிற்கிறாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில். இவள் கிரீடத்தில் பிறைச்சந்திரன் ஒளி தருகிறான். இவள் அணிந்திருக்கும் அணிகளில் வைர மூக்குத்தி மிகமிகப் பிரகாசமானது. கடலில் பிரயாணம் செய்பவர்க்குக் கலங்கரை விளக்குப் போல் ஒளிதரும் என்று உபசாரமாகக் கூறுவதும் உண்டு. வலக்கையில் மாலை தாங்கி, இடக்கையைத் தொடையில் பொருத்தி நிற்கிற எழில் சொல்லும் திறத்தது அன்று. அம்மையைக்