பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

259

தாணுமாலயன் திருமணம் தடைப்பட்டு விடுகிறது. அன்னை பகவதியின் தவம் தொடர்ந்து நடக்கிறது. அவளுக்கு வந்த பரிசுப் பொருள்களான பொன்னும் மணியும், நெல்லும் கரும்புமே இன்று குமரிக் கரையில் பல நிற மணல்களாகவும் பல குன்றுகளாகவும் பரந்து கிடக்கின்றன என்று கூறுவார்கள்.

கன்னிக்குமரியைத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பலபடக் கூறும். நெடியோன் குன்றம் தமிழ்நாட்டின் வட எல்லை என்றால் தொடியோள் பௌவம் தமிழ் நாட்டின் தெற்கெல்லை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பஞ்ச நாரி தீர்த்தங்களில் கன்னியாகுமரி கன்னி தீர்த்தம் என்னும் சிறப்புப் பெற்றது; 'குரங்கு செய் கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை கூறுவதால் ராமர் கட்டிய சேது. இவ்வளவு தூரம் பரவி இருந்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. வட நாட்டிலிருந்து பலர் தென் திசைக் குமரியாட வருவார் என்பதும் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். ஆதியில் பாண்டியனிடமே இக்குமரித்துறை இருந்திருக்கிறது. குமரித்துறைவன் என்றே அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். அதன் பின்னரே சோழர் சேரர் ஆதிக்கம் இங்கு பரவியிருக்கிறது. குமரிக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்ததென்றும் அதுவே குமரிக் கண்டம் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். நாம் வந்தது ஆராய்ச்சி செய்ய அல்ல, அன்னை பகவதியைக் கண்டு தரிசிக்க. தரிசிக்கு முன்பே குமரித் துறையாடி, நம் பாவச் சுமைகளைக் களைந்து விட்ட அன்னையின் அருள் பெற்று வீடு திரும்புவோம். அது போதும் நமக்கு.