பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சங்கீதரத்னாகரத்துக்கும் இடைப்பட்ட கல்வெட்டு இதுதான், மகேந்திரவர்மன் சித்திரக்காரப் புலி மாத்திரம் அல்லவே? சங்கீர்ண ஜாதியின் ஆதிகர்த்தா ஆயிற்றே.

குடுமியான் மலையைவிட்டு மேற்கு நோக்கிப் பத்து மைல் நடந்தால் கொடும்பாளூர் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊருக்கு வந்து சேருவோம். வேளிர் தலைவர்களது பிரசித்திபெற்ற ஊர் ஆயிற்றே. சோழ மன்னர்களுக்கு வலக்கை போல் இருந்து போர்களில் உதவியவர்கள் அவர்கள். கொடும்பாளூரில் நாம் காண வேண்டிய இடம் இரண்டு. ஒன்று மூவர் கோயில், மற்றொன்று ஐவர் கோயில், மூவர் கோயிலில், இன்று இருப்பது இரண்டு கோயில்களே. அதுவும் இடிந்து கிடந்ததைத் திரும்பவும் எடுத்துக்கட்டி வைத்திருக்கிறார்கள். கோயில் முழுதும் கல்லாலே கட்டியிருக்கிறார்கள். அழகான சிற்ப வடிவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள், இந்த மூவர் கோயிலிலாவது இரண்டு கோயில்கள் உருப்படியாக இருக்கின்றன. 'ஐவர் கோயிலில் அதுவும் இல்லை. ஐந்து தளிகளையுமே காணோம். இடிந்த அடித்தளம், அங்கு சிதறிக் கிடக்கும் சில கற்சிலைகள் அவ்வளவுதான். கொடும்பாளூர் வேளிர்களில் ஒருவரான பூதி விக்கிரமகேசரி காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இவன் இரண்டாம் பராந்தகச்சோழன் காலத்தில் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் என்று தெரிகிறது.