பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வேங்கடம் முதல் குமரி வரை

ஊரின் பெயரே - திருமெய்யம், அந்தத் திருமெய்யத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமெய்யம், தொண்டைமான் புதுக்கோட்டைக்குத் தெற்கே பதின்மூன்று மைல் தொலைவில் உள்ள ஒரு தாலுகாவின் தலைநகர். இதனை இன்று திருமயம் என்றே அழைக்கின்றனர், சத்யகிரீசுவரரும், சத்யமூர்த்தியும் வந்து தங்கியிருக்கிற தலம் திருமெய்யமாக இருப்பதில் விசேஷ மில்லைதான். என்றாலும் திருமெய்யமே நாளடைவில் திருமய்யம் எனத் திரிந்து, பின்னர் திருமயம் என்று குறுகியிருக்கிறது. வடக்கேயிருந்து காரிலோ, பஸ்ஸிலோ வருகிறவர் ஊர்ப்பக்கத்துக்கு வந்ததும் கோட்டைச் சுவரில் இருக்கும் பைரவரை வணங்கித்தான் ஊர் புகவேண்டும், அவ்வழியே செல்லும் பஸ்காரர்கள் கூட அந்த இடத்துக்கு வந்ததும் பஸ்ஸை நிறுத்தி, சிதறுகாய் ஒன்றைப் போட்டுவிட்டுத்தானே நகருகிறார்கள். நாமும் அப்படியே செய்யலாம். இந்தப் பைரவரை 'அவாய்டு' பண்ணிக்கொண்டுவர விரும்பினால் புதுக்கோட்டை மானாமதுரை லயனில் திருமயம் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு இறங்கி மேற்கு நோக்கி நாலுபர்லாங்கு குளக்கரை வழியாக நடந்தால் ஊர் வந்து சேருவோம்.

ஊரைச் சுற்றி ஒரு பெரிய கோட்டை இருந்திருக்க வேணும், அதன் சிதைந்த சின்னங்கள் இன்னும் தெரிகின்றன. ஊருக்குள் நுழைந்ததும் நம் கண் முன் தெரிவது ஒரு சிறிய குன்றும் அதன் மேல் உள்ள கோட்டையும்தான். மலைமேலே ஏறுவது எளிது. ஆனால் அங்குள்ள காவல்காரனைத்தேடிப் பிடித்து அவனையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனென்றால் மலை மீதுள்ள கோட்டைச் சுவரிலுள்ள வாயிலைக் கதவிட்டுப் பூட்டி வைத்திருப்பார்கள். அதைத் திறக்கும் திறவு கோல் அக்காவல்காரனிடம் தானே இருக்கிறது. மலை ஏறி உச்சிக்குச் சென்றால் அங்குள்ள மேட்டில் பழைய பீரங்கி ஒன்றிருக்கும். அதன் பக்கத்தில் ஏறி நின்று வடபுறம் உள்ள ஏரி குளம் நெல் வயல் எல்லாவற்றையும் பார்த்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். கோட்டையில் பார்க்கவேண்டியவை வேறு ஒன்றும் இல்லைதான்.