பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

43

வின்னியாசத்தைப் பற்றியது. ஆனால் இந்தக் கல்வெட்டின் மேலேயே வெட்டிய கல்வெட்டு குடைவரை அமைப்பு முதலிய சான்றுகளைக் கொண்டு இக்கோயில் மகேந்திரவர்ம பல்லவனே கட்டியிருக்க வேண்டும் என்று கருத இடம் இருக்கிறது. சத்திய மூர்த்தியின் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் சாத்தன் மாறன் இக்கோயிலைப் புதுப்பித்தான் என்றும் தெரிகிறது. அவன் தாயான பெருந்தேவி நிலமான்யம் நிரம்ப அளித்திருக்கிறாள் என்றும் தெரிகிறது. சாத்தன் மாறன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன். அதன் பிறகு விஜயாலய சோழன் சந்ததியினரே இந்த நாட்டை ஆண்டிருக்கின்றனர். அவர்களின் பிரதிநிதியான அப்பண்ண தண்ட நாயகன் ராமேசுவரத்திலிருந்து திரும்பி வரும்போது இத்தலத்தில் தங்கி இங்குள்ள இரண்டு கோயில் தர்மகர்த்தாக்களுக்குள், ஏற்பட்டிருந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்திருக்கிறான். இத்தண்ட நாயகன் ஹொய்சள தளகர்த்தன். இவன் சிவவிஷ்ணு ஆலயங்களுக்கு இடையே ஒரு சுவர் நிரந்தரமாக எழுப்பியிருக்கிறான். இதை ஒரு கல்வெட்டில் குறித்திருக்கிறான்.

இந்தக் கல்வெட்டு கி.பி. 1245-இல் பொறிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்த வட்டாரம் சேதுபதியின் ஆளுகையில் இருந்திருக்கிறது. அவர்களில் விஜய ரகுநாத ராயர் என்பவர் இந்தப் பிரதேசத்தைப் புதுக்கோட்டை தொண்டைமான்களுக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் தஞ்சாவூரிலிருந்து ஆனந்தராவ் புதுக்கோட்டை மீது படையெடுத்து வந்தபோது விஜய ரகுநாதத் தொண்டைமான் இத்திருமெய்யம் கோட்டையிலேயே வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறான். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான கட்டபொம்மனும் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையில் வந்து ஒளிந்திருந்தார்கள் என்பதும் கர்ண பரம்பரை. இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் கோட்டை பிந்திக் கட்டப்பட்ட தொன்று என்றும், கோயில் மகேந்திரவர்மன் காலத்தே வெட்டப்பட்டது என்பதும் விளக்கமுறும். திருமெய்யத்து இன்னமுதன் என்று பெரிய திருமடலிலேயே திருமங்கை மன்னனால் பாராட்டப்பட்டவன் அல்லவா இந்தச் சத்தியமூர்த்தி?