பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனிடம் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி, மகேந்திரவர்மனுக்குப் பின் நரசிம்மவர்ம பல்லவனிடமும் சேனாதிபதியாக இருந்திருக்கிறார். சாளுக்கிய மன்னன் புலிகேசிமேல் நரசிம்மவர்மன் எடுத்த படையெடுப்பில் முன்னின்று சேனையை நடத்தியிருக்கிறார். சாளுக்கிய மன்னன் தலை நகரான வாதாபி மீது படையெடுத்து அந்தப்போரில் வெற்றி கண்டு அந்த நகரைத் தீக்கிரையாக்கியிருக்கிறார். வாதாபி நகரில் அகப்பட்டதையெல்லாம் சுருட்டிக் கொள்ளத் தன் படைவீரர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் நரசிம்மவர்மன். எல்லாப் படை வீரர்களும் பொன்னையும் பொருளையும் கொள்ளை கொண்டு போகிறபோது, பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி மட்டும் பொன்னிலும் பொருளிலும் மோகம் கொள்ளாமல், அந்த நகரத்தின் கோட்டை வாயிலில் இருந்த கணபதி விக்ரஹத்தை மட்டும் தம்முடன் எடுத்துச் செல்ல மன்னனிடம் அனுமதி கேட்டிருக்கிறார். மன்னனோ! அனுமதி கொடுக்கத் தயங்கவில்லை. அவ்வளவுதான்: வாதாபிக் கோட்டையிலுள்ள கணபதி பெயர்த்தெடுக்கப்பட்டார். நாடு திரும்பிய வெற்றி வீரர்களோடு வீரராக, ஏன் அந்த வீரர்கள் தலைவராகவே தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டு விட்டார் பரஞ்சோதி, நேரே இந்த விநாயகரைத் தம் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடிக்கே கொண்டு வந்து விட்டார். அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்தும் வைத்து விட்டார். வாதாபி கணபதி தமிழ் நாட்டுக்குள் வந்து நிலைபெற்றது இப்படித்தான்.

திருச்செங்காட்டாங்குடியில் வாதாபி கணபதியைப் பரஞ்சோதியார் (ஆம்! பின்னர் தம்மைச் சிறுத்தொண்டன் என்று அழைத்துக்கொண்டவர்) பிரதிஷ்டை செய்த திருநாளன்று பல்லவ