பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேங்கடம் முதல் குமரி வரை

என்றார் வள்ளுவர். ஆனால் இவரோ உலகு இன்புறக் காணுவதில் தாம் துன்பமுற்றாலும் பரவாயில்லை என்று துணிந்திருக்கிறார். அப்படித் துணிந்து தான் பெற்ற உபதேசத்தை மக்களுக்கு எல்லாம் சொன்னவர்தான் வைஷ்ணவ பரமாசாரியாரான ராமாநுஜர். அப்படி அவர் மதில்மேல் ஏறி நின்று எல்லோரையும் வாருங்கள் என்று கூவி உபதேசித்த தலம்தான் திருக்கோட்டியூர். அந்தத் திருக்கோட்டியூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்கோட்டியூர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர், மானாமதுரை திருச்சி லயனில் கல்லல் ஸ்டேஷனில் இறங்கி வண்டி பிடித்துக்கொண்டு எட்டு மைல் மேற்கு நோக்கிப் போக வேணும் இந்த வழியில் வேறு வசதி கிடையாது. மதுரையிலிருந்து திருப்புத்தூர் வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிப் பத்துப் பன்னிரண்டு மைல் பஸ்ஸிலோ காரிலோ வந்தால் திருக்கோட்டியூர் சென்று சேரலாம். இல்லையென்றால் ரயிலிலோ பஸ்ஸிலோ சிவகங்கை சென்று அங்கிருந்து பதினாறு மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் போய்ச் சேரலாம். சிவகங்கை வழியாகச் செல்வதுதான் எளிதான வழி.

சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டின் பேரிலேயே கோயில் இருக்கிறது. கோயிலுக்கும் ரோட்டுக்கும் கிழக்கே தெப்பக்குளம் இருக்கிறது. வாயிலைக் கடந்ததும் பெரிய விஸ்தாரமான வெளிப் பிராகாரம். அங்கேயே பொன் வேய்ந்த கருடக் கம்பம் இருக்கிறது. இனி கோயிலுள் நுழையுமுன் ஏன் இத்தலம் கோட்டியூர் என்று அழைக்கப்படுகிறது என்று தெரிய வேண்டாமா? இரணியன் மூவுலகையும் ஆட்சி செய்கிறான். அவன் ஆட்சியில் தேவர்களெல்லாம் நைகின்றனர். அவனை எப்படி ஒழிப்பது என்று தெரியவில்லை. கதம்ப முனிவரது சாபத்தால், துஷ்டர்கள் ஒருவரும் நெருங்கக் கூடாது என்று ஏற்பட்டிருந்த இத்தலத்தினையே தேவர்கள் எல்லாம் தேர்ந்தெடுத்தனர், தேவர்களோடு தேவர்க்கும் தேவராம் தேவர் மூவரும் கோஷ்டியாகச் சேர்ந்து ஆலோச்னா நடத்திய