பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

மஞ்சங்கள் எல்லாமும் தேடிச் சேர்த்து வைத்திருப்பவர் காளீசர்தான். நிலங்களின் பட்டா எல்லாம் அவர் பேரிலேதான்; சொத்துச் சுதந்திரம் எல்லாமே அவருக்குத்தான். ஆனால் அவருக்கு என்று பெரிய பிரம்மோத்சவமோ அல்லது மற்றச் செலவுகளோ அதிகம் கிடையாது. அவருக்கு நடக்கும் உத்சவம் எல்லாம் தைப்பூசத்தில் புஷ்ப ஸ்நானம் தான்.

ஆனால் சோமேசருக்குத்தான் ஆடம்பரமான உத்சவம், வைகாசி விசாகத்திலே. அந்த பிரமோத்சவத்தில்தான் தேரோட்டம் தெப்பம் புஷ்ப பல்லக்கு எல்லாம். மொத்தச் செலவு பதினாயிரம் வரை ஆகும். ஆடம்பரமான செலவுகளுக்குக் குறைவேயில்லை. இருவரையும் அடுத்து ஒரு சின்னஞ்சிறு கோயிலிலே குடியேறியிருக்கும் சுந்தரேசரோ மிக்க அமைதியாக வாழ்கிறார். நித்தியப் படியிலும் இவர் தேவை மிகமிகக் குறைவுதான், உத்சவாதிகளிலும் இவர் கலந்து கொள்கிறதில்லை. ஆம்! இப்போது விளங்குகிறது-காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரர் சுகிக்க என்று மக்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்று.

இப்படி, காளீசுவரரும் சோமேசரும், சுந்தரேசரும் கோயில் கொண்டிருக்கும் ஊர்தான் இன்று காளையார் கோயில் என்று வழங்கப்படுகிறது. இக்காளையார் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தச் சின்னஞ்சிறிய ஊர் மதுரைக்கு நேர்கிழக்கே நாற்பது மைல் தூரத்தில் தொண்டிக்குச் செல்லும் ரஸ்தாவில் இருக்கிறது. ரயில் வழியாகச் செல்ல விரும்புபவர்கள் சிவகங்கை ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கே பத்து மைல் தூரம் செல்ல வேணும். காரைக்குடி, தேவகோட்டை, சருகனி வழியாகவும் வரலாம். ஊர் சிறிய ஊர்தான் என்றாலும் கோயிலும் குளமும், கோபுரமும் வீதிகளும் பெரியவைகளாகவே இருக்கின்றன. இந்தத் தலத்தை அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடியிருக்கிறார்கள், தேவார காலத்தில் இந்தத் தலத்தின் பெயர் கானப்பேர் என்று இருந்திருக்கிறது.