பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள மானாமதுரையிலிருந்தே வந்ததாம். ஆங்கிலேயர் இங்கு வந்து காலூன்றி நிற்க நினைத்தபோது அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களில் முதன்மையானவர் இந்த மருது சகோதரர்கள். போரில் பிறரது வஞ்சனையால் மருது சகோதரர்கள் தோற்கிறார்கள். தோற்றவர்களில் பெரிய மருது ஆங்கிலேயர் கையில் அகப்படாது தலை மறைவாய் இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தையே ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆங்கில தளகர்த்தனான கர்னல் ஆக்னியூவுக்கு, செய்வது என்னதென்று தெரியவில்லை. அப்போது அறிகிறான், இவர் இந்தக் கோபுரம் கட்டிய அருமையை, உடனே தோன்றுகிறது ஒரு யுக்தி. 'சரி இன்றைக்குப் பத்தாவது நாள் இந்தப் பெரிய மருது வந்து அடிபணியாவிட்டால் இவர் கட்டிய இந்தக் கோபுரம் தரைமட்டமாக்கப்படும்' என்று ஊர் ஊராகத் தெருத் தெருவாகத் தண்டோராப் போடச் சொல்கிறான்.

பெரிய மருதுவின் காதில் விழுகிறது தண்டோராச் சத்தம். தாம் கட்டிய கோபுரம் தரைமட்டம் ஆக்கப் படுவதைவிடத் தம் தலையையே கொடுப்பது சரி என்று எண்ணுகிறார். குறித்த நாளிலே வந்து தளகர்த்தனிடம் சரண் அடைகிறார். தளகர்த்தனும் இவரது கலை உணர்வை, பக்தியை எல்லாம் மதிக்கிறான். என்றாலும் மேலதிகரிகளின் உத்தரவுப்படியே இவரைத் தூக்கிலிட ஏற்பாடு செய்கிறான். அந்தச் சமயத்தில் அவர் வேண்டிக் கொண்டபடியே காளீசர் சந்நிதிக்கு நேரேயுள்ள பொட்டலில் அவருக்குச் சமாதி எழுப்பவும் ஒத்துக் கொள்கிறான். இப்படி என்றும் சமாதியிலிருந்து சோமேசரையும் காளீசுவரரையும் வணங்கிக் கொண்டிருப்பவரது சிலா உருவமே பெரிய மருதுவின் திருவுரு. காளீசர் சந்நிதி வாயிலில் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. சமீபகாலத்தில் கோயிலின் திருப்பணிகள் முடிந்து, கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுக் குடமுழுக்கு விழாவும் சிறப்பாக நடந்திருக்கிறது.