பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

"வடவேங்கடம்; தென் குமரி,
ஆய் இடை
தமிழ் கூறும் நல் உலகம்”

(வடக்கில் வேங்கட மலையையும், தெற்கில் குமரி முனையுைம், கொண்ட நிலப்பரப்பே தமிழ் மொழி பேசும், உயர்ந்தோர் பொழும் நன்னாடு) என்று தமிழ் நாட்டின் எல்லையே, பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் பெரியார் உணர்த்தி நிற்கிறார். தமிழ் நாட்டை ‘நல் உலகம்' என்றது ஏன்? நன்மை பயப்பதும், மேலவர் வாழ்வதுமான நாட்டையே நல் உலகம் என்னலாம் இல்லையா?

ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அன்பும், அறனும், செறிந்து பண்பும் பயனும் மலர வாழ்ந்து காட்டியும், தேர்ந்துரைத்தும் வான்புகழ் பூத்த நல்லோர்களை உலகினுக்குத் தந்தது இந்நாடு, அறம், பொருள், இன்பம், வீடு அடைதலே மனிதப் பிறவியின் பயன் என்பதை உணர்த்தி, வாழ்வாங்கு வாழ, வழி வகுத்த மேலோர்கள் நிரம்பிய நாடு இது. இந்நாட்டு இலக்கியங்கள் முழுவதுமே மக்களை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி காட்டுவனவாகும். இகத்தில் உள்ள இன்பத்திற்கு ஓர் அளவு கோலாய் அமைவதுடன், பரத்தில் உள்ள இன்பத்தை உணர்த்தும் நல் ஓவியமாகவும் தமிழர் இலக்கியம் அமையும்.

இலக்கியங்களை எல்லாம் தொகுத்து, வகுத்து, பகுத்தறிவோமானால் பல்வேறுபட்ட வகைகள் இருப்பதை உணர்வோம். துறையாலும் முறையாலும் வேறுபட்டவை ஆனாலும், நெறியாலும் முடிவாலும் மாறுபடாமை தமிழ் கூறும் நல் உலகத்தின் அருமையாகும். அதனாலேதான் எந்த மொழியையும் விடத் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் மலிந்து பொலிகின்றன. சிருங்காரத் துறையில் பிரபந்தம் இயற்றினாலும் பெரும்பாலோர் கடவுளையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டனர். மன்னர் போன்ற மானிடர் மீது பாடியவர்களும் கூட இறைவன் தன்மையைப் புலப்படுத்த மறந்தாரில்லை. பல்வேறு காலங்களில், பல்வேறு துறைகளில், பல்வேறு புலவர்களால் முன்னர் பாடப் பெற்ற தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை நூல் (Anthology) ஆக்கினார்கள் பின் வந்தவர்கள்.