பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வேங்கடம் முதல் குமரி வரை

பெண்கள். அவ்வளவுதான், மணமகனும், மணமகளும் அப்படியே மறைந்துவிடுகிறார்கள். எல்லோரும் திகைத்து நின்றபோது ரிஷப வாகனரூடராய் இறைவனும், இறைவியும் காட்சி கொடுக்கிறார்கள் இறைவன் வேதியரைப் பார்த்து, 'மாசற்ற மறையவனே, உன் தவத்துக்கு மெச்சியே பார்வதியை நின் மகளாக அவதரிக்கச் செய்து உன்னிடம் வளரச் செய்தோம். அவளைத் திரும்பவும் திருமணம் முடித்து என்னிடம் அழைத்துக் கொண்டோம்” என்று கூறுகிறான். “இனி இந்த ஊரிலேயே இந்தக் கல்யானசுந்தரியுடன் கல்யாண ஈசுவரனாகக் கோயில் கொள்வோம். இந்த ஊருக்கும் கல்யாணபுரம் என்றே பெயர் வழங்கட்டும்.” என்று சொல்கிறான்.

இத்தனையும் கேட்ட பின்பும் வேதியருக்கு ஓர் ஆசை. “இறைவனே! திருமணம் நடந்தது சரிதான். சப்தபதி, சேஷ ஹோமம் எல்லாம் நடக்கவில்லையே? அந்தச் சடங்கெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் மறையவர் மணமுறைப்படி திருமணம் பூர்த்தியான தாகாதே“ என்று அங்கலாய்க்கிறார். “சரி, நடக்கட்டும் உங்கள் சடங்குகள்” என்கிறார் இறைவன். சடங்குகள்” நடந்து இறைவன் இறைவி திருமணமும் பூர்த்தியாகிறது.

இப்படிப் பார்வதியை இரண்டாம் தடவை திருமணம் முடித்த பின்னும் இறைவன் தம்முடைய வாத்தியார் தொழிலை விடவில்லை. 'என்ன வேதம் ஓதுதல் கூடுமா?' என்கிறார். அம்மையும் சளைக்கவில்லை. ராஜமானரிக்க சதுர்வேதபுரத்தில்தான் தந்தையான வேதியரிடம் ஆயிரம் தடவைக்கு மேலாக வேதங்களை ஓதி ஓதி உணர்ந்தவள் ஆயிற்றே. ஆதலால் 'கட கட' என்று பாடம் ஒப்புவிக்கிறாள். 'சரி ஒப்புவித்த பாடத்துக்கெல்லாம் பொருள் சொல்லு' என்கிறார் உபாத்தியாயர். அம்மை ‘திரு திரு' என்று விழிக்கிறாள் பள்ளிப் பிள்ளையைப் போல. உடனே இறைவன் வேதம். வேதப் பொருளையெல்லாம் திரும்பவும் அவளுக்குப் போதிக்கிறார். இப்படி வேதத்தில் திரும்பவும் உபதேசம் பெற்ற மங்கை, பூண்முலையாளாக, கல்யாண சுந்தரியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் உத்தரகோச மங்கை (உத்தரம் என்றால்