பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வேங்கடம் முதல் குமரி வரை

வந்த பரிகளோ திரும்பவும் நரிகளாகிக் குதிரைக் கொட்டாரத்தில் இருந்த மற்றக் குதிரைகளையும் அழித்துவிட்டு மறைகின்றன. இதற்காக மன்னன் வாதவூரரைத் தண்டிக்க முனைகிறான், வாதவூரன் தமது அன்பன் என்பதை, இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படிபட்டுக் காட்டுகிறான் பாண்டியனுக்கு. அதன்பின் வாதவூரர் அரன் அடிக்கே தொண்டு செய்யும் அடியவராகத் திருப்பெருந்துறை, திரு உத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர் முதலிய தலங்களில் இறைவனை வணங்கிப் பதிகங்களைப்பாடி, தில்லை சென்று இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு. இந்த வாதவூர் என்னும் மாணிக்கவாசகர் மனத்துக்கு உகந்த இடம். திருப்பெருந்துறைக்கு அடுத்தபடி உத்தர கோசமங்கைதான்.

மாணிக்கவாசகருக்கும் இத்தலத்துக்கும் ஏற்பட்ட தொடர்பு பற்றியும் ஒரு கதை இருக்கிறது. இந்த உத்தரகோசமங்கைத் தல புராணத்தில் கைலை மலையிலிருந்த கண்ணுதல், தம் சீடர் ஆயிரம் பேரோடு உத்தரகோச மங்கை வந்து அங்குள்ள பொய்கை ஒன்றின் பக்கத்தில் தங்குகிறார். அந்தச் சீடர்களையெல்லாம் அங்கே இருத்தி விட்டுத் தம்முடைய பக்தை அழகமர் மண்டோதரிக்குத் தரிசனம் கொடுக்க இலங்கைக்கே செல்கிறார். அப்படிச் செல்லும் போது தம்முடன் கொண்டு வந்த திருமுறைகளையெல்லாம் தம் சீடரிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். தான் இலங்கை சென்று சேர்ந்ததைக் குறிக்க அந்தப் பொய்கை நடுவிலே ஒரு சுடர் தோன்றும் என்றும், அந்த சமயத்தில் பொய்கையில் மூழ்குவார் முத்தி பெறுவர் என்றும் கூறுகிறார். சீடர்கள் எல்லாம் பொய்கைக் கரையிலே காத்துக் கிடக்கின்றனர். சில நாட்கள் கழித்து, இறைவன் கூறியபடியே பொய்கையின் நடுவில் கொழுந்து விட்டுச் சுடர் எழுகின்றது. உடனே சீடர் எல்லோரும் பொய்கையில் மூழ்கி முத்தி பெற விரைகின்றனர், சீடரில் ஒரேயொருவர் மட்டும் இறைவன் கொடுத்துச் சென்ற திருமுறைகளைக் காப்பதே முத்தி பெறுவதைவிட. முக்கியம் என நினைத்து, பொய்கையில் மூழ்காமல் தனித்து நின்று திருமுறைகளைக்