பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

101

யிருக்கும். ஆனால் இன்றோ நன்றாக வளைத்து ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள். இப்பொழுது மொத்தம் 615 படிகள் இருக்கின்றன. பழனி மலை ஏறும் தூரத்தில் பாதிதான். திருத்தணி மலை ஏறுவது போல் இரண்டு பங்கு ஏறவேணும்.

ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு பழைய படிக்கட்டுக்களில் ஏறினால், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாரையும் வணங்கி விட்டு, திருமலை முருகனை வணங்கக் கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்து விடலாம். கோயிலுள் நுழையுமுன் கோயிலை ஒரு சுற்று சுற்றலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரமும் அதன் அடியில் உத்தண்ட வேலா யுதமும்,' ஆதி மூலநிலையமும் இருக்கும்.

அங்கு நம் வணக்கத்தைச் செலுத்தி விட்டு, அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்து விட்டு கோயிலைச் சுற்றிக்கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிராகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச் செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத் தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள்.

ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம், பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு தூணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருக்கும்.