பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வேங்கடம் முதல் குமரி வரை

பிரதான வாயிலை அடுத்து தீபஸ்தம்பமும் கொடி மரமும் இருக்கின்றன. இந்த தீபஸ்தம்பம் முழுவதுமே இரும்பு அகல் விளக்குகளை அடித்து வைத்திருக்கிறார்கள். திருவிழாக்காலங்களில் எல்லா விளக்கையும் ஏற்றினால் எப்படியிருக்கும் என்று மானசீகமாகக் கற்பனை. பண்ணிப் பார்க்கலாம். தீப மங்கள சோதி நமோ நமோ என்று பாடவும் செய்யலாம். பொங்கழல் உருவனான அய்யனை, தீப ஒளி மூலம் அலங்கரிக்கக் கற்றவர் மலைநாட்டு மக்களே என்றால் மிகையில்லை. இந்தப் பிரகாரம் வழியாய் நடந்து தெற்குப் பிரகாரத்துக்கு வந்தால், அங்கு ஒரு சிறு சந்நிதி கிழக்கு நோக்கியிருக்கும். அது என்ன சந்நிதி என்று விசாரித்தால் அதுவே தக்ஷிணாமூர்த்தி சந்நிதி என்பர். தக்ஷிணா மூர்த்தி என்றால் தென்பக்கம் நோக்கியிருக்க வேண்டாமோ? இவர் என்ன கிழக்கு நோக்கியிருக்கின்றா? என்ற வியப்போடேயே கோயில் வாயில் வழியாக உள்ளே நோக்கினால், கல்லாலின் புடையமர்ந்து, வல்லாளர் நால்வருக்கும் உபதேசிக்க தக்ஷிணாமூர்த்தியைக் காணவில்லை. ஒரேயொரு சிவலிங்கம்தான் இருக்கிறது.

இந்தத் தனிக் கோயிலுக்குப் பக்கத்திலே சந்நிதி ஒன்றிருக்கிறது. அதுவே சாஸ்தா சந்நிதி. இவர் கோயிலுக்கு விமானம் இல்லை. வெயிலில் காய்கிறார். மழையில் நனைகிறார். இவரே கயிலையில் சேரமான் பாடிய பாடல்களின் பிரதியை உலகுக்குக் கொண்டு வந்தவர் என்கிறார்கள். இந்த வரலாற்றை பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் கூறுகிறார்.

இனி இப்பிராகாரத்தைச் சுற்றிக் கொண்ட மேற்கு வாயில் வழியாக அடுத்த பிராகாரத்துக்குள் நுழையலாம். நாம் இங்கு வந்தது சேரமானையும் சுந்தரரையும் பார்க்கத்தானே? ஆதலால், அவர் இருக்கும் இடம்