பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வேங்கடம் முதல் குமரி வரை

இந்த அஞ்சைக் களத்து அப்பர் சுந்தரர் ஒருவராலேயே பாடப் பட்டவர், ஒன்றுக்கு இரண்டாக பரவையாரையும் சங்கிலியையும் மணந்த சுந்தரர், இந்த அஞ்சைக் களத்து அப்பனை தரிசித்த பின்தானே மனை - வாழ்க்கையை வெறுத்து, அதன்பின் கயிலை செல்ல விரைந்திருக்கிறார். அதையே அவர் தனது தேவாரத்திலும் பாடுகிறார்!

வெறுத்தேன், மனை வாழ்க்கையை
விட்டொழிந்தேன், விளங்கும் குழைக்
காதுடை வேதியனே!
இறுத்தாய், இலங்கைக்கு இறை
ஆயவனை தலைப்பத்தோடு
தோள்பல இற்று வீழக்
கறுத்தாய் கடல் நஞ்சமுதுண்டு
கண்டம் கருகப் பிரமன்தலை
ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடங்கரை மேன -
மகோதை அணியார் பொழில்
அஞ்சைக் களத்து அப்பனே!

என்பது சுந்தரர் தேவாரம். இத்தலத்திற்கு வந்துதான் பரசுராமர் தன் தாயாம் ரேணுகையைக் கொன்ற பாவம் நீங்க, அஞ்சைக் களத்து அப்பனை வணங்கியதாகவும் புராணம் கூறுகிறது.

மலை நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலம் இது ஒன்றுதான். இந்தத் தலத்தையும் விடாமல் சென்று கண்டோம், என்ற திருப்தியோடு வீடு திரும்பலாம். கோவையிலிருந்து சிவக்கவிமணி C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள், ஆண்டு தோறும் இத்தலத்திற்கு வருவார்களாம். அவர்கள் கட்டளை இட்ட வண்ணமே இன்று கோவை அன்பர் ஒருவர் ஆண்டுக்கொரு முறை