பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

119

பாண்டிய நாட்டிற்கு வந்து அங்கு அவனை இழந்து, பின்னர் சேர நாடு சென்று விண்ணேறிய பத்தினிக் கடவுள் கண்ணகி, இவளே துர்க்கையின் அவதாரம் என்று எண்ணுவதற்கு சிலப்பதிகாரம் இடம் தருகிறது.

சேரமன்னனாகிய செங்குட்டுவன் வடதிசைக்கு படை கொண்டு, அங்கு தமிழ் மன்னரை இழித்துக் கூறிய கனக விசயர்களை வென்று, இமயத்தில் கல்லெடுத்து, அதைக் கனக விசயர் தலை மீது ஏற்றி, தன் தலைநகரான வஞ்சிக்குத் திரும்பி, அங்கு கண்ணகிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி வழிபட்டான் என்பது வரலாறு. இதனையே சிலப்பதிகாரத்து வஞ்சிக்காண்டம் விரிவாகக் கூறுகிறது.

வஞ்சி என்பது, திருவஞ்சைக்களம் கொடுங்கோளூர் முதலிய ஊர்கள் சேர்ந்த பகுதியே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டியிருக்கின்றனர். சேர மன்னனாகிய சேரமான் பெருமான் இருந்து அரசாண்ட இடமும் கொடுங்கோளூரே. ஆகவே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுப்பித்த கோயில் இதுவாக இருக்கலாம். ஆனால் இன்று கட்டப்பட்டிருக்கும் கோயில் எல்லாம் பிந்திய காலத்தில் கூறை வேய்ந்து கட்டப்பட்டவையே. கொடுங்கோளூர் பகவதியே பழய கண்ணகி என்று கொண்டாலும், இன்று வழிபடப் பெறும் வடிவமே சேரன் செங்குட்டுவன் பாரதிஷ்டை செய்த வடிவம் என்று கொள்ள வேண்டியதில்லை, அக்கோயில் உள்ளேயே கருவறையை ஒட்டி மூடிக் கிடக்கும் அறையில் ஒருக்கால் அந்தப் பழைய வடிவம் இருந்தாலும் இருக்கலாம்.

இன்னும் கண்ணகியை இலங்கை மக்கள் பத்தினிக் கடவுளாக இன்று வழிபடுகின்றனர் என்கிறார்கள். அப்பத்தினிக் கடவுளை பௌத்தர்களும் இந்துக்களும் சேர்ந்தே வணங்குகிறார்கள் என்பர். தமிழ்நாட்டில் முதல்