பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

143

வேண்டும். நாம் வீட்டின் தலை வாயிலில் நின்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பார்க்கிறோம் கொஞ்ச நேரம் கழித்து யார் யார் போனார்கள் என்று கேட்டால் விழிக்கிறோம்.

ஆனால் அதே சமயத்தில் வீட்டிற்குள் நின்று ஜன்னல் வழியாக தெருவில் செல்பவர்களைக் காணுகிறோம் . எவ்வளவு நேரம் கழித்தாலும் யார் யார் சென்றார்கள் என்று சொல்ல முடிகிறது. இதற்கு காரணம் என்ன? பலர் நம் கண்முன் வருகிற போது ஒருவருமே நிலைத்து நிற்பதில்லை.

ஆனால் ஜன்னல் வழியாகப் பார்க்கிற பார்வையில் அளவு ஒடுங்குகிறது. ஜன்னல் சட்டத்திற்குள் வரும்பர்கள் மாத்திரமே கவனத்தைக் கவருகிறார்கள். மற்றவர்கள் மறைந்து விடுகிறார்கள். இதுபோலத் தான் குடும்ப வேலை முதலிய தொல்லைகள் இருக்கும் போது இந்தப் பரந்த உலகில் எந்த இடத்திலும் மனம் ஒன்றி நிற்பதில்லை. எங்கெங்கோ ஓடுகிறது.

ஆனால் கடவுளை வந்தித்து வணங்க ஒரு இடம் என்று குறிப்பிட்டு விட்டால் அங்கு செல்லும் போதெல்லாம் ஜன்னல் வழியாய் தெருவைப் பார்க்கிற மாதிரி மனம் ஒன்றில் நிலைக்கிறது. கடவுளிடத்து தங்குகிறது. ஆதலால்தான் கோயில் என்று ஓர் இடம் வேண்டியிருக்கிறது. இறைவனை நினைக்க, தொழ எல்லாம். இப்போது விளங்குகிறதா. எதற்காக ஆலயங்கள் எழுந்தன என்று. அங்கு மூர்த்திகளும் ஏன் ஸ்தாபிக்கப் பெற்றார்க ளென்று.

சரி, ஏதோ இறைவனைக் கண்டு தொழ ஓர் இடம் வேண்டும். ஆனால் அதற்காக இத்தனை பிரம்மாண்டமான மதில்கள் வேண்டுமா? கோபுரங்கள் வேண்டுமா? மண்டபங்கள் வேண்டுமா? விமானங்கள் வேண்டுமா?