பக்கம்:வேட்டை நாய்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

15

 இவன்தான் உங்கள் அத்தை மகன் ஸெதாந்தா . கெட்டிக்காரப் பையன்” என்று கூறி அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

உடனே அரசரின் மூன்று பிள்ளைகளும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒருவன், ஸெதாந்தாவின் தோளிலே கை போட்டான்; மற்றொருவன் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினான். கடைக் குட்டிப் பையன் அவன் வயிற்றிலே வேடிக்கையாக ஒரு குத்துக் குத்தி, “அடே, நீ பந்தாடுவதில் பெரிய சூரனா இருப்பாய் போலிருக்கிறதே!” என்றான்.

பிறகு அரசர் ஸெதாந்தாவிடம், “போர் முடிந்ததுமே அம்மாவையும் உன்னையும் காணவேண்டும் என்று நினைத்தேன். அங்கு வந்து திரும்புவதற்குக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். அவகாசமே கிடைக்கவில்லை. எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் வருவதென்றுதான் இருந்தேன்...சரி, வா, அப்புறம் சாவதானமாகப் பேசிக் கொள்ளலாம். முதலில் குளித்துச் சாப்பிடு. பசியுடன் இருப்பாய்” என்று அவனை அழைத்துச் சென்றார்,

ஸெதாந்தா குளித்து முடித்தான். அவனுக்கு அழகான உடை, அறுசுவை உணவு எல்லாம் கொடுக்கப்பட்டன.

அன்றைய தினமே, ‘ஸெதாந்தா சுகமாக வந்து சேர்ந்துவிட்டான்’ என்று அவனுடைய அம்மாவுக்கு அரசர் ஆள் மூலம் சொல்லி அனுப்பினார். அத்துடன் ‘இன்னும் ஒரு மாதத்துக்குள் ஸெதாந்தாவுடன் அங்கு வருகிறேன்’ என்றும் கூறி அனுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/17&oldid=499322" இலிருந்து மீள்விக்கப்பட்டது