பக்கம்:வேட்டை நாய்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வேட்டை நாய்

கொப்பாட்டும்-இந்தப் பெயர் உங்களுக்குப் புதிதாக இருக்கும். ஆம், இது ஒரு பர்மாக்காரரின் பெயர்.

அந்த பர்மாக்காரர் மிகவும் கெட்டிக்காரர். எவ்வளவு கெட்டிக்காரத்தனம் இருந்தால்தான் என்ன, அதை நல்ல வழியில் உபயோகப்படுத்தினால்தானே பிரயோஜனம்?

பிறரை எப்படி ஏமாற்றுவது, பிறருடைய பொருளை எப்படி எடுத்துக் கொள்வது - இந்த மாதிரி வழிகளிலேயே தமது கெட்டிக்காரத் தனத்தை உபயோகப்படுத்தி வந்தார், அவர்.

அவருக்குச் சொந்தமாகப் பத்துப் படகுகள் இருந்தன. அந்தப் படகுகள் ஐராவதி நதியில் ஒடிக்கொண்டிருக்கும். அடிக்கடி மரம், நெல் மூட்டை முதலியவற்றை ஏற்றிக்கொண்டு கீழ் பர்மாவிலிருந்து மேல் பர்மாவிற்கும், மேல் பர்மா விலிருந்து கீழ் பர்மாவிற்கும் செல்லும்.

அந்தப் படகுகளை ஒட்டுவதற்குப் பத்துப் படகோட்டிகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இவ்வளவு சம்பளம் என்ற கணக்கில்லை. ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்த பிறகு கொப்பாட்டும் அவர்களுக்குக் கூலி கொடுப்பார். ஒருவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கூலி.

கொப்பாட்டும், படகோட்டிகளுக்கு எப்போதுமே கூலியைச் சரியாகக் கொடுப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/42&oldid=502492" இலிருந்து மீள்விக்கப்பட்டது