பக்கம்:வேட்டை நாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேட்டை நாய்


பேச்சை நம்பிவிட்டார்கள்! தங்களால் முடிந்த உதவியைச் செய்தார்கள்; உறவினர்களில் ஒரு வரைக் கூட அவள் விடவில்லை. எல்லோரிடமும் ‘வசூல்’ செய்து விட்டாள்! இப்படியே சில நாட்கள் செய்து வந்தாள். எவ்வளவு நாட்கள்தான் இப்படியும் செய்ய முடியும்? உறவினர்களுக்கு அவள் பேரில் சந்தேகம் ஏற்பட்டது. வரவர சந்தேகம் வலுத்தது. “ஹாஸன் சிறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இவள் பொய் சொல்லுகிறாள்” என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.

இந்தச் செய்தி பாத்திமாவுக்கு எப்படியோ எட்டிவிட்டது. “சரி, இனி இவர்களிடம் சென்றால் ஆபத்து! உள்ளதையும் பிடுங்கிக்கொண்டு விரட்டி விடுவார்கள்” என்று எண்ணினாள். உடனே, நேராக வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ஹாஸனிடம் நடந்தவற்றைக் கூறினாள். ஹாஸன் மிகுந்த வருத்தம் அடைந்தான். “சரி, வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்” என்று பெருமூச்சுடன் கூறினான்.

மறுநாள் இரவு அரண்மனையிலிருந்து ஹாஸன் வீட்டுக்கு வந்ததும், வாய்க்குள்ளிருந்து எதையோ எடுத்தான். பாத்திமா அதைப் பார்த்தாள்.

“ஆ இது என்ன! வைர மோதிரம்!” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“உஸ்... சப்தம் போடாதே! இதை நான் அரண்மனையிலிருந்து கிளப்பிக் கொண்டுவந்து விட்டேன்” என்று மெதுவாகக் கூறினான் ஹாஸன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/56&oldid=502602" இலிருந்து மீள்விக்கப்பட்டது